பக்கம் எண் :

130நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

என்னும் குறுந்தொகை (164ஆம்) செய்யுள் காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்ததாகும்.

சூத்திரம் : 45 
 உள்ளுறை உவமம், ஏனை உவமமெனத
தள்ள தாகும், திணையுணர் வகையே.

கருத்து : இது, அகத்துறைச் செய்யுட்களில் வரும் உரிப்பொருட் பகுதிகள் எல்லாவற்றிற்கும் சிறப்பாக உரித்தாம் உவம வகை கூறுகிறது.

பொருள் : திணையுணர் வகையே = ஐந்திணை உணர்த்தும் உரிப்பொருட் பகுதிகளில்; உள்ளுறை உவமம் = உள்ளுறை உவமமானது; ஏனை உவமமெனத் தள்ளதாகும் = மற்றைய உவமத் தோற்றம்போல அருகாமல் வந்து பயிலும்.

குறிப்பு : ஈற்றேகாரம் பிரிநிலை, அகத்துறைகளுள் திணையுணர்வகையை வேறுபிரித்தலின். அவ்வகையல்லாப் பிற அகப்பகுதிகளில் ஏனையுவமம் அருகாது என்பது குறிப்பு.

உவமம், வெளிப்படத் தோன்றும் உவமமும், உள்ளுறை உவமமுமென இருவகைத்தாம். இவற்றுள் உள்ளுறை உவமமே திணையுணரும் உரிப்பொருட் பகுதிகளைச் சிறப்பித்தற்கு உரித்தாகும். ஏனைய உவமம் அவ்வாறு அகவொழுக்க வகைகளுக்குச் சிறவாதாகையால், அகத்துறைகளில் திணையுணரும் பகுதிகளுக்கு அத்துணையா ஆட்சி பெறுதலில்லை. ‘தள்ளதாகும்’ என்றதனால், ஏனை உவமம் அருகிப் பயிலும் என்பதும், உள்ளுறை உவமம் அவ்வாறன்றிப் பெருவரவிற்றாம் என்பதும் பெறப்படும்.

உள்ளுறை, உவமத்தின் ஒரு பகுதியா யடங்குமேனும், புறத்திற்கே பெரிதும் உரிமை கொள்ளும் ஏனை உவமம் போலாது அகத்திற்கே சிறந்துரிய தாதலின், இது உவம இயலிற் கூறப்பெறாது அகவொழுக்கம் கூறும் இத்திணையிற் கூறப்பட்டது. ஏனை உவமத்தை ‘அகத் திணைக்குரித்தல்லாதது’ என ஏனை உவமச் சூத்திரத்தின் கீழ் விரிவுரையில் நச்சினார்க்கினியர் கூறுவர். சான்றோர் செய்யுட்களில் அருகிய ஆட்சி அகத்திணையிலும் ‘ஏனை உவமம்’ பெறுதலின், அதனை அறவே