பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை131

அகத்திணைக்கு உரித்தில்லை என விலக்குதல் பொருந்தாது. இன்னும் இளம்பூரணர் உள்ளுறை உவமம் ஒழிந்த உவமம் என இருவகையாலும் ‘திணையுணர்வகை தப்பாதாகும்’ எனக் கூறுவதாலும், ஏனை உவமத்திற்கு அருகியேனும் அகத்திணைக்கண் ஆட்சி உண்மை தெளியப்படும்.

சூத்திரம் : 46 
 உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக்
கொள்ளு மென்ப குறியறிந் தோரே.

கருத்து : இது, உள்ளுறை உவமத்திற்கு நிலைக்களம் உணர்த்துகிறது.

பொருள் : உள்ளுறை = அகத்திணையிற் பயிலும் உள்ளுறை உவமம்; தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் கொள்ளும் = கருப்பொருள்களுள் தெய்வம் நீக்கி மற்றையவற்றைத் தனக்கு நிலைக்களனாகத் தழுவி வரும்; என்ப குறியறிந்தோரே = என்று கூறுவர் ஒப்பியலறிந்தோர்.

குறிப்பு : ஈற்றேகாரம் அசை, ஒப்பியலறிந்தோர் என்னுமெழுவாய் கூறுவர் என்னும் வினைக்கேற்ப அவாய் நிலையாற் பெறப்பட்டது.

சூத்திரம் : 47 
 உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருண் முடிகென
வுள்ளுறுத் திறுவதை உள்ளுறை உவமம்.

கருத்து : இது, உள்ளுறை வுவமத்தின் இயல்பு கூறுகின்றது.

பொருள் : உள்ளுறுத்திதனோடு ஒத்துப் பொருள் முடிகென = வெளிப்படக் கூறும் பொருளோடு, உள்ளும் பொருளும் ஒத்து முடியுமாறு; உள்ளுறுத் திறுவதை உள்ளுறை உவமம் = உள்ளத்து ஊன்றி நுணுகி உணர அமைந்து முடிவது உள்ளுறை உவமமாகும்.

குறிப்பு : இறுவதை என்பது, ஏற்றை என்பது போல, ஐயீறு பெற்று முடிந்த பெயர்.