பக்கம் எண் :

132நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

“எற்றோ வாழி, தோழி! முற்றுபு
 கறிவளர் அடுக்கத்து இரவின் முழங்கிய
 மங்குன் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
 கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி
 வரையிழி யருவி உண்டுறை தரூஉம்
 குன்ற நாடன் கேண்மை
 மென்தோள் சாய்த்தும் சால்பீன் றன்றே”

(குறுந். 90)

மிளகுக் கொடி வளரும் மலையில், இரவில், இடி முழங்கும் கார்தரு மழையில், உயிர் நிறைந்த முசுக்கடுவன் விரும்ப அதன் கையகப்படாது கிளையினின்று நழுவிய மணமுள்ள பலாக்கனியை மலையருவி தக்கார் உண்ணத் தகுந்த துறையில் கொண்டு தரும் குன்ற நாடன் ‘கேண்மை மெல்லிய தோளைச் சிறிது வருத்தினும் அமைதியை அளித்தது’ என்றது வெளிப்படக் கூறும் பொருள். இதில், செல்வம் நிறைந்த அயலார் தலைவியை விரும்பி வந்தோர் வரைய வொண்ணாமல், ஊரலரை அஞ்சிச் செறித்த தலைவியைக் காவல் நிறைந்த இற்புறத்தில் இரவில் தோழி கொண்டுதர, தலைவன் உடன் கொண்டுசென்று, அவளைத் தன் மனையில் கற்பறம் சிறக்கக் காதலால் மணந்து நன்மையைத் தந்தான் என்பது உள்ளுறுத்து ஒத்துமுடிவதால், இது உள்ளுறை உவமமாமாறு காண்க.

சூத்திரம் : 48 
 ஏனை உவமம் தானுணர் வகைத்தே.

கருத்து : இஃது உள்ளுறை ஒழிந்த மற்றைய உவமத் தோற்றம் உணர்த்துகிறது.

பொருள் : ஏனை உவமம் = உள்ளுறை ஒழிந்த பிறஉவமம்; தானுணர் வகைத்தே = நுணுகி உள்ளுறுத் துணர வேண்டாது, பட்டாங்கே சொல்வழிப் பொருளறியக் கிடக்கும் கூறுபாட்டை யுடைத்து.

குறிப்பு : அகத்திணைக்குச் சிறந்துரிய உள்ளுறையைக் கூறிய பின், ஒப்பக்கூறல் ஒன்றென முடித்தல் தன்னின முடித்தல் என்னுமுறைபற்றி, உள்ளுறுத் துணரும் உள்ளுறை உவமம் போலாது பட்டாங்குணரும் பான்மைத்தாம் “ஏனைஉவம” இயலும்