பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை197

மாராயம் பெற்ற நெடுமொழியானும் = பெற்ற பரிசிற் பெருமிதத் தற்புகழ்ச்சியும்;

மாராயம் என்பது வரிசையொடு பெற்ற பரிசு சுட்டும் நன்மதிப்பு. நெடுமொழி = தற்புகழ்ச்சி.

“நிலவுக்கதி ரளைந்த நீள்பெருஞ் சென்னி
அலர்மந் தாரமோ டாங்கயன் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்குவிறன் மாலை
மேம்பட மலைதலும் காண்குவம் ஈங்கெனக்
கொடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும்
நெடுமா ராய நிலைஇய வஞ்சியும்
. . . . . . . . . . . . . .
புட்கைச் சேனை பொலியச் சூட்டிப்
பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்தென்
வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும்”

சிலப். காட்சி. 137 - 142, 147 - 149

பொருளின் றுய்த்த பேராண் பக்கமும் = மாற்றாரை மதியாமல் எதிர்த்து ஊக்கிய மிக்க ஆண்மைத்திறமும்;

“கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு
. . . . . . . . . . . . . .
குறுந்தொடி கழத்தகைச் சாபம் பற்றி
நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க அவன்கண்ணி தார்பூண்டு
தாலி களைந்தன்று மிலனே; பால்விட்
டயினியும் இன்றயின் றனனே; வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்று மிழிந்தன்று மிலனே; அவரை
அழுந்தப் பற்றி அகல்விசும் பார்ப்பெழக்
கவிழ்ந்து நிலஞ்சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனிறு மிலனே. ”

- புறம். 77

இப் புறப்பாட்டில், நெடுஞ்செழியன் இளம் பருவத்தில் பகை மன்னர் எழுவரைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தாக்கிப் பொருதுவென்ற ஆண்மைத் திறனை இடைக்குன்றூர் கிழார் புகழும் செவ்வி பாராட்டற் பாலது.