பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை199

மற்ற சிலப்பதிகாரச் செய்யுளடிகள் செங்குட்டுவன் வஞ்சிசூடி வட வாரியர்மேற் சென்றபொழுது நிகழ்த்திய செய்திகளுள் தன் படைத்தலைவர்க்குப் பெருஞ் சோறு வழங்கிய சிறப்புச் சுட்டுதல் காண்க.

வென்றோர் விளக்கமும் = (சேரும் வழியில் நேரும் போர்களில்) கொற்றம் கொண்டோர் பொலிவும்;

“அரும்பவிழ் தார்க்கோதை அரசெறிந்த வெள்வேல்
 பெரும்புலவுஞ் செஞ்சாந்து நாறிச் சுரும்பொடு
 வண்டாடு பக்கமு முண்டு குறுநரி
 கொண்டாடும் பக்கமு முண்டு. ”

- முத்தொள்ளாயிரம்

தோற்றோர் தேய்வும் = அவரால் அடப்பட்டோர் மெலிவும்;

“வாய்வா ளாண்மையின் வண்டமி ழிகழ்ந்த
 காய்வேற் றடக்கை கனகனும் விசயனும்
 ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு
 செங்குட் டுவன்தன் சினவலைப் படுதலும்,
 சடையினர் உடையினர் சாம்பற் பூச்சினர்
 பிடிகைப் பீலிப் பெருநோன் பாளர்
 பாடு பாணியர் பல்லியத் தோளினர்
 ஆடு கூத்தர் ஆகி எங்கணும்
 ஏந்துவா ளொழியத் தாம்துறை போகிய
 விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தர”

- சிலப். கால்கோள். 221 - 30

இவ்வடிகளில் செங்குட்டுவனால் முறியடிக்கப்பட்டழிந்தோடிய பகைப்படையின் நலிவு விளக்கப்படுத லறிக.

குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் = குறையாத சீருடைய தம் மன்னர் வெற்றிக்குப் புகழும் மாற்றார் தோல்விக்குப் பரிவும் குறித்து, மகளிர் பாடும் உலக்கைப் பாட்டும்;

வள்ளை என்பது பெண்டிர் பாடும் உலக்கைப் பாட்டு; அதாவது தலைவனை வாழ்த்தி முருகனைப் பரசி உலக்கைக் குற்றோடொத்துப் பெண்டிர் பாடும் பாட்டு; ஆடவர் முருகனைப் பாடும் வள்ளியின் வேறுபட்டது. இது முன் வெட்சித் திணைச் சூத்திரத்தின் கீழ் விளக்கப்பட்டது.