பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை201

களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
. . . . . . . . . . . . . . . .
புடைவீழ் அந்துகில் இடவயிற் றழீஇ
வாள்தோள் கோத்த வன்கட் காளை
சுவல்மிசை அமைத்த கையன், முகனமர்ந்து
. . . . . . . . . . . . . . . .
சிலரொடு திரிதரும் வேந்தன். ”

நெடுநல்வாடை

இதில் “செய்”யென் கிளவி முதனிலைத் தொழிற்பெயர்; செய்கை எனப் பொருள்படும். இந் நெடுநல் வாடை ஈற்றடிகள் நெடுஞ்செழியன் பாசறையில் பொருது புண்பட்ட தன்படை மறவரை முக மலர்ச்சியுடன் பொருந்தப் பாராட்டித் தமராகத் தழுவும் பரிசு குறிக்கப்படுகின்றது.

இனி, இதை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, ‘தளரும் தம் படையைப் பின் வாங்காது தடுத்தூக்கித் திறன் வியந்து தழுவுதலுடனே கூட்டி’ எனப் பொருள் கொள்ளினும் அமையும்.

இப் பொருளில் இத் துறைக்குச் செய்யுள் வருமாறு :

“. . . . . . . . . . . . . . . . .
அவர்படை வரூஉங் காலை நும்படைக்
கூழை தாங்கிய அகல்யாற்றுக் குன்று
விலங்கு சிறையின் நின்றனை எனாஅ
அரிதாற் பெருமநின் செவ்வி;
. . . . . . . . . . . . . . . . .
பொருநர்க் குலையாநின் வலன்வா ழியவே. ”

- புறம். 169

காரிக்கண்ணனாரின் இப் புறப்பாட்டடிகள் தளரும் தன் படையின் கூழை தாங்கி, வரும் பகைப் படையை வலி தொலைத்த பிட்டனின் பெருமையைப் கூறுகின்றன.

இப் பொருளில் அழிபடை என்பது அழியும் படை என விரியும்; தட்டோர் என்பது தடுத்தோர் எனும் பொருளதாகும்.