பக்கம் எண் :

202நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

அழிந்து புறங்கொடுத் தோடுபவர் மேல் படை தொடாத் தறுகண்மை தழிஞ்சி எனப் பிற்காலத்துப் புலவர் சிலர் கொள்வாராயினர். அப் பொருளில் இத்துறையைப் பண்டைச் சான்றோர் பாடாமையானும், இச் சூத்திர அடிக்கு உரைகாரர் ஒருவரும் அப்பொருள் கொள்ளாமையானும், அது ஈண்டுப் பொருந்தாமை யறிக.

கழிபெருஞ் சிறப்பிற்றுறை பதின்மூன்றே = மிகப் பெருஞ் சிறப்புடைய வஞ்சித் துறை பதின்மூன்றாகும்.

குறிப்பு : இதில், ‘ஆன்’களும் ‘பக்க’மும் இசை நிரப்பு. ஈற்றேகாரம், அசை. உம்மைகள் எல்லாம் எண் குறிக்கும். அரவம், எடுத்தல் என்பவற்றின் ஈற்றும்மை தொக்கன.

சூத்திரம் : 9 
 உழிஞை தானே மருதத்துப் புறனே.

கருத்து : இது, பற்றலர் அரணை முற்றி எறியும் உழிஞைப் புறத்திணை, மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாம் எனக் கூறுகிறது.

பொருள் : உழிஞை தானே = உழிஞைத் திணையானது; மருதத்துப் புறனே = மருதம் என்ற அகத்திணைக்குப் புறனாகும்.

குறிப்பு : தானே என்பதன் ஏகாரம் பிரிநிலை. புறனே என்பதன் ஏகாரம் ஈற்றசை.

மருதத்துக்கும் உழிஞைக்கும் அரணுடைய ஊர்களே நிலைக்களம் ஆதலானும், புலத்தலும் ஊடலும் மருத ஒழுக்கம் ஆதல் போல முற்றிய ஊரரணின் அகப்புறப் படைகள் தம்முள் கலாய்த்து இகழுதலே உழிஞையாதலானும், மருதத்துக்கு உழிஞை புறனாயிற்று.

சூத்திரம் : 10 
 முழுமுத லரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற் றாகும் என்ப.