பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை203

கருத்து : இஃது, உழிஞையின் இயல் விளக்குகிறது.

பொருள் : முழுமுதல் அரணம் முற்றலும் = கெடாத தலையான காவலுடைய கோட்டையை வளைதலும்; கோடலும் = எயில்காவல் ரெதிர்ப்பை அழித்து எயிலைக் கைப்பற்றுதலும்; அனைநெறி மரபிற்று ஆகும் என்ப = அம்முறைகளின் தன்மை யுடைத்தாம் உழிஞைத்திணை என்பர் புறநூற் புலவர்.

குறிப்பு : முன்னைச் சூத்திரத்து‘உழிஞை’ என்பது ஈங்கு ‘ஆகும்’ என்னும் வினைக்குக் கொண்ட பொருள் தொடர்பால் எழுவா யாயிற்று. ‘என்ப’ என்பதற்கு ஏற்பப் “புறநூற் புலவர்” என்னும் வினைமுதல் அவாய்நிலையால் வருவிக்கப்பட்டது. ஓசை நோக்கி அனைய என்பதன் ஈறு கெட்டு அனை என நின்றது.

ஈங்குக் கோடல் என்பது முற்றியோர் வென்று அரண் கொள்ளுதலையே குறிக்கும். கொள்ளாது முற்றிய கோட்டையை விட்டு விலகுதல் உழிஞை ஆகாமையிற் கோடலும் முற்றலுடன் கூறப்பட்டது. இனி, கோடலை அரண் காவலர் தொழிலாக்கி, முற்றலை மட்டும் உழிஞை எனின், முற்றியோர் அரண்கைப்பற்றுதல் உழிஞையில் அடங்காமல், வேறு திணையுமாகாமல், குன்றக் கூறலாய் முடியும்; அன்றியும், முற்றியோர் அரணைப் பற்றாவழி அகப்படை அதனை மீட்டுக்கோடல் இன்மையால், அவரரண் கோடல் உழிஞை என்பது மிகைபடக் கூறலாகும். இன்னும், முற்றியோரை முறிய ஓட்டி அகத்தவர் வெற்றி பெற்றகாலை, அஃது அரண் காத்தலன்றிக் கோடலாமாறில்லை யாதலானும், முற்றியோர் வெற்றியால் அரணைப் பற்றிய பின் தோற்ற காவலர் அவரைமுற்றி அரணை மீட்டுக்கோடல் அவரளவில் உழிஞையே யாமாதலானும், முற்றியோரும் அரண் காவலரும் கைகலந்து பொருவது உழிஞையின் இடை இயல் நிகழ்ச்சி யாவதன்றித் தன்னளவில் தனித்தொரு திணையாமாறு இல்லையாதலானும், அகத்தவர் எதிர்ப்பை நொச்சியெனத் தனித்தொரு திணையாக்கின் அதற்கு நேராம் அகத்திணை ஒன்று மின்றாதலானும், அகத்தோன் வீழ்ந்த நொச்சியை உழிஞைத் துறைவகைகளுள் ஒன்றாயடக்கிப் பின் சூத்திரம் கூறுவதானும், இங்குக் கோடல் என்பது அகத்தவர்க்கு ஆகாமை ஒருதலை.