பக்கம் எண் :

212நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

“. . . . . . . . . . . . . . . . . . . . . . .
 நெடுமதில் நிறைப்பதணத்
 தண்ணலம் பெருங்கோட் டகப்பா எறிந்த
 பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ. ”

- பதிற்றுப்பத்து22.

10.   இகன்மதிற் குடுமிகொண்ட மண்ணு மங்கலமும் = பகைமதிலின் முடியகப்படுத்திய பெருமிதம் கொண்டாடும் நீர்விழவும்

“. . . . . . . . . . . . . . பகைவர்
கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி யல்லது வினையுடம் படினும்
ஒன்றல் செல்லா உரவுவாள் தடக்கைக்
கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக”

- பெரும்பாண் - வரி 450-4.

(இதில் குடுமியை மதிலுக்கு ஆக்காமல் பிரித்து ஆகுபெயராக்கிப் ‘பிறர் குடுமி’ எனக்கொண்டு, காவலர் முடிக்கலம் எனப் பிறர் கூறுதல் பொருந்தாமை வெளிப்படை. வேந்தனுக்கல்லால் மதில் காக்கும் மறவர்க்கெல்லாம் முடிக்கலம் இன்மையானும், முற்றிய மதின்மேல் முடிவேந்தன் ஏறி முடி பறிகொடுத்தல் இராவணற்கன்றிப் பிறமன்னர்க்குச் சான்றோர் செய்யுட்களில் கேட்கப்படா அருநிகழ்ச்சி யாதலானும், இங்கு ‘மதிற்குடுமி’ என நின்றாங்கே நேர் பொருள் கொள்ளுதலே அமையும். முற்றியோர் எயிற்குடுமி கொள்ளுதல், மேற் பெரும்பாண் அடிகளிலும் மற்றும் பல பழஞ் செய்யுள்களிலும் பரக்க வருவதனாலும், இதுவே தொல்காப்பியர் கருத்தாதல் தேற்றமாகும். )

11.   வென்ற வாளின் மண்ணோடு = உழிஞைப் போரில் வென்றோர், வெற்றித்தந்த வாளை நீராட்டும் விழவுடன்; (மண்ணுதல் = கழுவுதல். )

“போர்க்கு உரைஇப் புகன்று கழித்தவாள்
 உடன்றவர் காப்புடை மதில ழித்தலின்
 ஊனுற மூழ்கி உருவிழந் தனவே. ”

- புறம். 97.