பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை221

5.   இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் = எதிர்த்து மலையும் இருபடைத் தலைவரும் தம்முள் பொருது கெடும் பரிசும்;

[தபுதி = இழவு அல்லது கேடு. இது கெடுதல் குறிக்கும் தபு என்னும் முதனிலை யடியாகப் பிறந்த தொழிற் பெயர்.  ] 

6.   ஒருவன், ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமையும் = ஒரு மறவன் தன் தலைவனை அவன் உடைபடையுட்புகுந்து (அதன் பின்னணியைத் தாக்கும் பகைவரைத் தகைந்து) ஏமமுறக்காக்கும் தளராத் தறுகண்மையாகிய எருமைமறமும்;

[கூழை = பின்னணி, தாங்கல் = தடுத்தல் அல்லது பேணுதலாம். இதில் தாங்கல் வினையை ஒருவனுக்கும் கூழைக்கும் தனித்தனி பிரித்துக் கூட்டுக. முறியுந் தம் படையின் பின்னணியைப் பகைவர் தாக்காது காத்தலும், அப்படை முறிய அடர்த்த பகைவரை எதிர்த்துத் தடுத்து நிறுத்தலும் ஒருவன் அருந் திறலாவதானும், அத்திறலுடை மறவன் (எதிர்வரும் எதற்கும் அஞ்சாது அசையாது நிலைத்து நிற்கும் எருமைபோல) தான் ஒருவனாய்த் தளராது எதிர்த்துவரும் படையைத் தாங்கும் தறுகண்மை வியத்தற்குரிய தாதலானும், அவன் திறம் எருமை மறமெனப்பட்டது. உடையும் படையின் பின்னணி தாங்கித் தொடரும் பகைஞரைத் தாக்கித் தகைக்கும் தறுகண்மை எருமை மறம் எனப்படும்.  ]

7.   படை யறுத்துப் பாழிகொள்ளும் ஏமத்தானும் = மேல்வரும் பகைப் படைக் கலங்களை அழித்து மதுகை கொள்ளும் பாதுகாவலானும்.  [ பாழி = மதுகை, வலி பெருமையுமாம்.  ] 

நீலக் கச்சைப் பூவா ராடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வருங் களிற்றொடு வேறுரந் தினியே
தன்னுந் துரக்குவன் போலு மொன்னலர்
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பி னூக்கி மெய்கொண்ட டனனே.

- புறம். 274.