| 222 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
8. களிறெறிந்து எதிர்ந்தோர் பாடும் = மேல்வரும் பகைவர் யானையை எதிர்த்தேறும் மறவர் பெருமையும், “கட்டி யன்ன காரி மேலோன் தொட்டது கழலே கையது வேலே சுட்டி யதுவும் களிறே யொட்டிய தானை முழுதுடன் விடுத்துநம் யானை காமினவன் பிறிதெறி யலனே. ” - தகடூர் யாத்திரை - புறத்திரட்டு. 1372 9. களிற்றொடுபட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும் = ஊர்ந்த யானையொடு கெட்டழிந்த மன்னனை, வென்று கொன்ற மன்னனின் வாள் மறவர் சூழ்ந்தாடும் ஆர்ப்பும்; [அமலுதல் = நெருங்குதல். ஈண்டு அமலை பலர் நெருங்கி ஆர்க்கும் ஆரவாரத்திற்கு ஆகுபெய ராயிற்று. ] “ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாம் கேளின்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி ஆடினா ரார்த்தார் அடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து. ” - புறத். 1348. 10. வாள் வாய்த்து இருபெரு வேந்தரும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும் = வாட்புண் பெற்று இகலும் பெருவேந்தர் இருவர் தாமும் தமக்குத் துணையாம் தமரும் ஒருவருந் தப்பாமல் மாய்ந்தழியும் தொகைநிலை என்னும் துறையும்; [ இதில் வரும் தும்பைத் தொகைநிலை, முன் சுட்டப்பட்ட உழிஞைத் துறையான தோற்றோர் தொலைவு குறிக்கும் தொகைநிலையின் வேறுபட்டுப், பொருமிருதிறத்தார் தொலைவும் தெரிப்பதாதலின், ஈண்டு வேறு கூறப்பட்டது. ] தொகைநிலைக்குச் செய்யுள் : “வருதார் தாங்கி யமர்மிகல் யாவது பொருதாண் டொழிந்த மைந்தர் புண்தொட்டுக் குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி நிறங்கிளர் உருவிற் பேஎய்ப் பெண்டிர் |