பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை227

கருத்து : இது, வாகையின் சிறப்புவகைகளைக் கூறுகிறது.

பொருள் : அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் = ஆறு வேறுவகை மரபினரான பார்ப்பாரின் சிறப்பியல்பின் சார்பாயும், ஐவகைமரபின் அரசர் பக்கமும் = ஐவேறு குடிவகையினரா யாளும் மன்னர் இறைமைத் திறமையின் சார்பாயும்; இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் = அறு வேறு மரபினரான மற்றைய தமிழகமக்களின் சிறப்பியல்புகளின் சார்பாயும்; மறுவில் செய்தி மூவகைக்காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்தேயமும் = வழுவற்ற வகையால் நிகழ்ச்சிகளை வெயில் மழை பனியெனும் தன்மையால் வேறுபட்ட முக்காலத்திற்குமேற்ப முட்டின்றிக் கடைபோக நடத்தி முடிக்கும் அறிஞன் திறல் சார்பாயும்; நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் = எட்டுவகையில் நோற்பார் நோன்பின் சார்பாயும்; பாலறிமரபில் பொருநர் கண்ணும் = அறத்தின் பாகுபாடறிந்த முறையாற் பொருவார் போர்த் திறத்தின் சார்பாயும்;  [ இங்கிதனை இரட்டுறமொழிதலாக்கி, ஒப்ப நடிப்பவர் பொருநுத் திறலையும் குறிப்பதாகக் கொள்ளுதலும் கூடும்; (பொருந் = ஒப்பு; போல நடித்தல்) ] அனைநிலைவகையொடு = அத்தன்மைய நிலையில் வேறலின்கூறாய் வீறுதரும் பிறவகை வினைவிறற்றுறையுடனே; ஆங்கெழு வகையிற் றொகை நிலைபெற்ற தென்மனார் புலவர் = ஏழு வகையாகத் தொகுக்கப்படும் தன்மையுடையது (வாகைத் திணை) என்பர் புறநூற்புலவர்.

குறிப்பு : தொகைநிலை பெற்றது என்ற வினைக்கேற்ப, “வாகைத்திணை” எனும் எழுவாய் கொண்ட பொருட்டொடர்பால் முன்னைச் சூத்திரத்திலிருந்து கொள்ளப்பட்டது. ‘ஆங்கு’ உரையசை. புலவர் என வாளாகூறினும், இடம் பொருட் பொருத்தம் நூற்போக்குகளுக்கேற்பப் ‘புறநூற் புலவர்’ என உரைகூறப்பட்டது.

‘அறுவகைப்பட்ட பார்ப்பனர்’ என்றதனால் தொல்காப்பியர் காலத் தமிழத்தில் பார்ப்பார் மரபால் அறுவேறு பிரிவுடையார் என்பது தெளிவு. இதையடுத்து அரசர் ஏனோர்களுக்கு மரபால் வகை எண் கூறப்படுதலின், பார்ப்பனரின் அறுவகையும் அவர்தம் மரபு பற்றியதேயாகும். மரபுச்சொல் குடிவகை குலமுறை வழக்காறுகளைக் குறிக்கும்.