பக்கம் எண் :

228நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

இனி, ஆறு தொழிலுடைமையால் பார்ப்பார் அறுவேறு வகையினராகாமை வெளிப்படை ஓதுவியாது ஓதும்வகையார், ஓதாது ஓதுவிக்கும் வகையார், என்ற முறையில் ஒவ்வொரு தொழில்வகையால் பார்ப்பாரை வெவ்வேறு மரபினராய் வகுப்பது யாண்டும் கேட்கப்படாதது.

இன்னும் இருபிறப்பாளருள் ஆறுதொழிலில் பின்னோர்க்கின்றிப் பார்ப்பாருக்குச் சிறப்புரிமைய மூன்றே: ஏற்றல், வேட்பித்தல், ஓதுவித்தல், இவை வீறுதரும் பெற்றியதன் றாதலின், வாகைவகையாகா. கொடைக்கு மாறாகக் கொள்ளுதலும் உயிர் செகுத்துண்டு வேட்டலும், வேதனத்துக்கு ஓதுவித்தலும் வெற்றிக்குரிய வாகையாகத் தமிழர் கொள்ளார். அவை வாகைவகையாய்ப் பண்டைச் சான்றோர் பாடாமையானும், இங்குக் கருதற்கில்லை. எனவே, இக்காலப் பார்ப்பார் - எண்ணாயிரவர் - மூவாயிரத்தார் - வடமர் - சோழியர் என வெவ்வேறு மரபினராதல்போல, முற்காலத் தமிழகத்தும் பார்ப்பார் மரபால் ஆறுவகை பிரிந்தவராதல் இயல்பு. இனி, அறுவகை வைதிக மத மரபாக அறுவகைப்பட்டவ ராதலும் கூடும். எனைத்து வகையாயினும், இங்கு மரபால் அறுவகையிற் பிரிவுடைய பார்ப்பார் பரிசு குறிப்பதல்லால், அவர் அனைவருக்கும் பொதுவாகும் வினையாலவரை அறுவகைப் படுத்தல் தொல்காப்பியர் கருத்தன்மை ஒருதலை. துவக்கத்தில் தென்தமிழ் வரைப்பில் வந்து புகுந்த வம்பப் பார்ப்பார் மிகச் சிலராவர். மரபாலன்னோர் அறுவகையராதல் அக்காலத் தனைவரு மறிந்ததொன்றாகலின் வகை விரியாது அதன் தொகை கூறப்பட்டது, யாவருமறிவதைக் கூறுதல் மிகையாதலின்; இருசுடர் மூவேந்தர், நானிலம் என்புழி, சுடர் வகை, வேந்தர் குடிவகை, நிலவகைகளை விரித்தல் வேண்டாததுபோல. இதிற்பின் “ஐவகை மரபின் அரசர்”“இருமூன்று மரபின் ஏனோர்” என அனைவரும் அறிந்த அவர் மரபுவகை விரியாது தொகை எண்ணாற் குறிப்பது போல, அக்காலம் யாவருமறிந்த பார்ப்பனர் மரபுவகை ஆறாதலின் எண் மட்டும் கூறப்பட்டது.

வேந்தர்தம் வாகைக்குரியவை போர்வென்றி கொடை செங்கோற்செவ்வி போல்வன. அதுவேபோல் ஏனைய தமிழ் மக்களுக்கு அவரவர்கொண்ட தவறறு தொழில் எல்லாம் வாகைக் குரியவாகும். ஐவகை மரபின் அரசர் என்றது, சேர, சோழ, பாண்டியராவார் முடிவேந்தர் குடிமூன்று, ஆறுதற்குரிய