பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை229

வேளிர் குடி ஒன்று, மற்றைய குறுநில மன்னர் குடிமரபொன்று, ஆக மன்னவர் ஐவகை மரபினராய்ப் பண்டைத் தமிழகத் தாண்டன ராதலின்; ‘அரசர்’ எனப்படுதலான், ஈண்டுக் குறிப்பது ஆளுமன்னரை மட்டுமே. தமிழ் வழக்கில் ஆளாத அரசர் என்றொரு சாதியில்லை. அமர்தொழில் தறுகண் மறவர் அனைவருக்கும் பொது உரிமை. அத்தொழில் புரிபவர் பொருநராவதல்லால், அரசர் எனப்படார்.

இனி ‘இருமூன்று மரபின் ஏனோர்’ என்றதும், தமிழர் மரபுவகையே குறிப்பதாகும். பண்டைத் தமிழகத்தில் மக்கள் மரபாலும் தொழிலாலும் ஒத்த உரிமையுடன் வாழ்ந்தார்கள்; அவரிடைப் பிறப்பா லுயர்வு தாழ்வுடைமையும், விரும்பும் வினைபுரியும் உரிமை விலக்கும் வழக்காறில்லை. தமிழர் வாழ்க்கை முறை ஒழுக்க வழக்கம் விளக்கும் தொல்காப்பியரின் அகப்புறத்திணை யியல்களில் யாண்டும் வடநூல் சுட்டும் வருணவகைக் குறிப்பு ஒரு சிறிதுமில்லை. இவ்வுண்மை ‘பெயரும் வினையு மென்றாயிருவகைய’ எனும் சூத்திர உரையில் விரித்து விளக்கப்பட்டது. அதனாலும், இங்குத் தொழிற்றுறையில் வாகை சூடுவோரின் மரபுவகையே கூறுதலானும், ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்’ வழக்கன்றிப் பிறநூல் மரபுகள் பேணாமையே தொல்காப்பியரின் துணிபாதலானும், ஈண்டு நிலம்பற்றிய தமிழர்மரபுவகை சுட்டுவதே கருத்தாதல் தேற்றமாகும். தமிழரின் தாவில் கொள்கை வினையனைத்தும் வாகைக்குப் பொருளாக, வெற்றி விரும்பு மக்களின் மரபுவகைகளையே இங்கு எண்கள் சுட்டுவது ஒருதலை. ஆயர், குறவர், உழவர், பரவர் என முல்லை முதல் நானில மக்களும், நிலக்குறிப்பின்றி யாண்டுமுள்ள ‘வினைவலர்’, ‘ஏவன் மரபினர்’ என்றிருவகையின் மக்களுமாக மரபால் அறுவகைப்பட்ட தமிழ்க்குடிகள் உண்மையைத் தொல்காப்பியரே அகத்திணை யியலில் தெளித்துளாராதலின், தமிழர் புறவொழுக்கம் கூறுமிவ்வியலின் இச்சூத்திரத்தும் தமிழரை இரு மூன்று வகையின் ஏனோர் என்றடங்கக் குறிப்பதே அவர் கருத்தாமெனத் தேர்வது பொருத்தமாகும். அகத்திணை குறிக்கும் ‘அடியோர்’, பிறர்போல் இன்ப ஒழுக்க மேற்பாராயினும், தாம் பிறர் உடைமையாய்த் தனிவினையுரிமை தமக்கிலராதலின், வாகைக்குரியா ராகாரென்பது வெளிப்படை. அவரொழியத் தமிழர் அறுவகையாரே வாகைக்குரியர்.