| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 231 |
யாளிகள் கதைக்கப் படுதல்போல், இடை இருவருணமும் வடவர் புனைந்த நூற்கதையன்றித் தமிழக வரைப்பில் வழக்காறில்லை. இன்னும், பார்ப்பாரல்லா மற்றைய மூன்று வருணத்தார்க்கும் மனு முதலிய வடநூல்கள் விதிக்கும் தொழில் வகைகள், இச் சூத்திரப் பழைய உரைகாரர் அவரவர்க்குக் காட்டும் தொழில் வகைகளுடன் முற்றும் முரணுதலானும், அவருரை பொருந்தாமை தேறப்படும். தமிழரெல்லாரும் கடைவருணச் சூத்திரர் என்பதே பார்ப்பனர் துணிவு. மற்றையமேலோர் மூவருக்கும் அடிமைகளாய்த் தொண்டு புரிவதொன்றே அவர்க்குரிய தொழில்; பிற தொழிலெதுவும் தமக்குத்தம் பயன்கருதி மேற்கொள்ளுமுரிமை சூத்திரருக்குச் சிறிதுமில்லை. ஒத்த உணவு மணம் ஓதல் வேட்டல் தொழில் முதலிய ஆரிய மக்களுரிமை எதுவுமில்லா இழிந்த அடிமைச் சூத்திரரை இரு பிறப்புடைய வைசியரோ டெண்ணி, வைசியர் தொழில்களைச் சூத்திரருக்குரித்தாக் கினதுமன்றி, தரும நூல்களில் வைசியருக்கும் விலக்கிய அறுதொழிலுடைமையையும் சூத்திரரான நான்காம் வருணத் தமிழருக்குத் தந்து கூறும் உரை ஆரிய நூல்களொடு முரணித் தமிழ்மரபு மழித்ததாகும். வரலாற்றுண்மை சிறிதுமறியாது வேளாளருள்ளிட்ட தமிழ்ப்பெருமக்களை எல்லாம் கடைக் கீழடிமைச் சூத்திர வருணத்தவரெனக் கூறுந்துணிவு அறிவறம் வெறுக்கும் வெற்றுரையாகும். இனி, பெரும் பொழுதாறும் வெயில், மழை, பனி என்ற மூன்றிலடங்கும். மூவகைக் காலமும் “நெறியினாற்றிய அறிவன்” என்றது, தன்மையால் முழுதும் வேறுபட்ட வெயில் மழை பனி என்ற மூவகைக் காலங்களின் நிலைமையும் விளைவும் நுண்ணிதினுணர்ந்து காலத்தாலாற்றுவ ஆற்றிப் பயன்கொள்ளும் மதிநுட்பம் நூலோடுடைய அமைச்சரைக் குறிப்பதாகும். நாளும் கோளும் கண்டதுபோலக் கொண்டுகூறி வயிறு வளர்ப்போர், கேட்போர் விரும்பும் எதிர்கால நன்மைகளைப் புனைந்து கூறித் தந்நலம் பேணுமளவினர். அவரை எதிர்கால விளைவுகள் எடுத்துக்கூறும் கணிகளெனப்படுவதன்றி, மூவகைக்காலமும் முறையின் ஆற்றிய அறிவர் என்பது அமையாது. அறிவோடமையாது “ஆற்றுதலும்” கூறுதலால், கணிகளின் வேறாய், வருவன. சூழ்ந்து செயல்வகை தேர்ந்து ஆய்ந்தாற்றும் அறிஞரான அமைச்சரைக் குறிப்பதே கருத்தாதல் தேற்றம். |