பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை233

கருத்து : இது, வாகைத்திணையின் துறை பதினெட்டுஆமாறு விளக்குகிறது. இவைகள் துறைகளென்றதனால் முன் சூத்திரம் கூறிய ஏழும் துறையாகாமல் வாகைத்திணையின் வகையாதல் தேறப்படும்.

பொருள் : கூதிர் வேனில் என்று இருபாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் = கூதிர்ப்பாசறை, வேனிற்பாசறை, என்னும் காலத்திற்கேற்ப அமைத்த கட்டூர்களில் போர்விருப்பால் பொருந்தியிருந்து அமர் கருதிய முறையும். (பாசறை எனினும் கட்டூரெனினும் ஒக்கும். )

கூதிர்ப்பாசறைக்குச் செய்யுள்:

“புலம்பொடு வதியு நலங்கிள ரரிவைக்
 கின்னா வரும்படர் தீர, விறறந்
 தின்னே முடிகதில் லம்ம; மின்னவி
 ரோடையொடு பொலிந்த வினைநவில் யானை
 நீடிர டடக்கை நிலமிசைப் புரளக்
 களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவ
 ரொளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
 வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கித்
 தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்
 பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல
 வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகமொடு
 முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
 மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு
 பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
 விருஞ்சேற்றுத் தெருவி னெறிதுளி விதிர்ப்பப்
 புடைவீ ழந்துகி லிடவயிற் றழீஇ
 வாடோட் கோத்த வன்கட் காளை,
 சுவன்மிசை யமைத்த கையன், முகனமர்ந்து
 நூல்கால் யாத்த மாலை வெண்குடை
 தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப
 நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
 சிலரொடு திரிதரும் வேந்தன்
 பலரொடு முரணிய பாசறைத் தொழிலே. ”

-நெடுநல் வாடை. - வரி 166 - 188