பக்கம் எண் :

242நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

விட்டோரை விடாஅள் திருவே;
விடாஅ தோரிவள் விடப்பட் டோரே. ”

- புறம். 358

 [ இங்கு, ‘கடிமனை நீத்த பாலினானும்’ எனப்பாடங் கொண்டு, “பிறர்மனை நயவாமை குறிக்கும், ” என்பர் இளம்பூரணர். அஃதான்ற அறவொழுக்காமெனினும், இல்வாழ்வார் எல்லார்க்கும் பொது அறமாதலின் தனி ஒருவர் வாகைக்குரிய வீறாகாது. அன்றியும், அதனினும் அருமைத்தாகும் அறிவழி காமவெறியொழி விறலை இதன்கீழ்க் ‘காம நீத்த பாலினானும்’ எனக்கூறுதலான், அதிலடங்கும் பிறர்மனை நயவாமையைத் தனித்தொரு துறையாக்குதலிற் சிறப்பில்லை. இன்னும், அப்பாடங்கொள்ளின், இறைமைச் செல்வத்தை இகழ்ந்து துறக்கும் உள்ள வெறுக்கையைக் குறிக்கும் வாகைத்துறை இல்லாதொழியும். ஆகையால், இங்குக் “கட்டில் நீத்தபால்” எனும் சிறத்தலறிக.  ] 

(12)  எட்டு வகை நுதலிய அவையத்தானும் = எண் வகைச் சால்புகளும் நிறைந்தார் மன்றத்து மதிக்கப் பெறுஞ் சிறப்பும்;

குறிப்பு : இது அவையத்து முந்தியிருக்கும் வீறு கூறுகிறது. அத்தகைய சால்புகள் : ஒழுக்கம், கல்வி, குடிப் பிறப்பு, வாய்மை, தூய்மை, நடுவுநிலை, அவாவின்மை, அழுக்காறாமை எனப்படுதல் நூலானறிந்தது.

செய்யுள்:

“குடிப்பிறப் புடுத்துப், பனுவல் சூடி,
 விழுப்பே ரொழுக்கம் பூண்டு, காமுற
 வாய்மைவாய் மடுத்து மாந்தித், தூய்மையின்
 காத லின்பத்துட் டங்கித், தீதறு
 நடுவுநிலை நெடுநகர் வைகி, வைகலும்
 அழுக்கா றின்மை, அவாவின்மை, யென்றாங்
 கிருபெரு நிதியமு மொருதா மீட்டுந்
 தோலா நாவின் மேலோர் பேரவை”.

- ஆசிரியமாலை