பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை247

தமிய ருண்டலு மிலரே; முனிவிலர்;
துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்;
புகழெனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே. ”

- புறம். 182

(18)  காமநீத்த பாலினானும் = வெல்லற்கரிய காமத்தைவெறுத்து விலக்கு மருந்திறலும்;

குறிப்பு : இது துறவன்று; இல்வாழ்ந்தும் காமம் கடியும் உரனுள்ளமுடைய பெரியார் உண்மையால், வேண்டியவெல்லாம் ஒருங்குவிடும் பெருந்துறவின் வேறாய், இருநிலை வாழ்வினு மொருதலைநிற்போரறமாகும். முற்றும் பற்று விடும் கருத்தை இதிற் புகுத்தின், மேற்குறித்த தீரத்துறக்கும் “அகற்சி” யுளடங்கிக் கூறியது கூறுங்குற்றமாய் முடியும். ஆதலின், மேலது துறவும், இத்துறை துறவறம் கருதாது காமம் கடியும் இருநிலைக்கும் பொதுவான உரனுள்ளப் பெருமையும் விளக்குதல் வெளிப்படை.

செய்யுள்: (1)

1. “இளையர் முதியர் எனவிருபால் பற்றி
 விளையு மறிவென்ன வேண்டா - இளையனாய்த்
 தன்தாதை காமம் நுகர்தற்குத் தான்காமம்
 ஒன்றாது நீத்தா னுளன். ”
 - பெரும்பொருள் விளக்கம்

2. “எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை யில். ”
 - குறள். 910

(இவ்வொன்பதும் மேற்கூறியாங்கு அறவகை வாகைத் துறைகளாகும். )

என்றிருபாற்பட்ட ஒன்பதிற்றுத்துறைத்தே = என வகைக்கு ஒன்பதாய் இருவகையிலெண்ணிய பதினெட்டுத் துறையுடையது வாகைத்திணை.