பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை249

வுலகம் புல்லிய நெறித்தே = நிலையற்ற உலகியலை யிகழும் முறையினை யுடையது (காஞ்சித்திணை).

குறிப்பு : நெறித்து என்னும் வினைக்கேற்பக் கொண்ட பொருட்டொடர்பால் காஞ்சித்திணை என்னுமெழுவாய் மேற்சூத்திரத்தி லிருந்து கொள்ளப்பட்டது. பாங்கருமை = ஒப்பின்மை, ‘சிறப்பு’ வீடுபேறாம் மறுமையின்பமாதல், ‘சிறப்பென்னும் செம்பொருள் காண்பதறிவு’ என்னுங் குறளானறிக. இன்னுருபு ஏதுப் பொருட்டு. பல்லாறு, யாக்கைநிலையாமை, இளமை நிலையாமை, செல்வநிலையாமை போல்வன கூறுதலாம். மதுரைக் காஞ்சி இதற்கு எடுத்துக் காட்டாகும். இனி, இந்நூலில் இத்திணைக்கு வகுக்கும் துறைகளெல்லாம், உலகியலை இகழ்வதற்கு மாறாக, அதைத்தழுவியே அமைந்திருப்பதால், அதற்கேற்பப் பொருள் கூறுவாருமுளர். அவர் கூறும் பொருளாவது: பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும் = முறை சிறவாத பல துறையானும், நில்லா வுலகம் புல்லிய நெறித்தே = நிலையற்ற உலகியலைத் தழுவியது காஞ்சித் திணை. இவ்வுரைக்கு, ‘பாங்கு’ முறைப் பொருட்டாகும்; ‘அருஞ்சிறப்பு’ அருங்கேடன் என்பது போலச் சிறவாமை குறிக்கும். இப் பொருளுக்கு, இதையடுத்த சூத்திர உரையில் அவ்வத்துறைக்குக் காட்டும் பாட்டே போதியதாம்.

சூத்திரம் : 24 
 மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்,
கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்,
பண்புற வரூஉம் பகுதி நோக்கிப்
புண்கிழித்து முடியும் மறத்தி னானும்,
ஏமச் சுற்ற மின்றிப் புண்ணோற்
பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்,
இன்னனென் றிரங்கிய மன்னை யானும்,
இன்னது பிழைப்பி னிதுவா கியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும்,
இன்னகை மனைவி பேஎய் புண்ணோற்
றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்,
நீத்த கணவற் றீர்த்த வேலிற்
பேஎத்த மனைவி யாஞ்சி யானும்,
நிகர்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பா டஞ்சிய மகட்பா லானும்,