| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 257 |
“கலஞ்செய்கோவே” என்னும் புறப்பாட்டும் இத்துறையேயாம். 15. கழிந்தோர் தேஎத்துக் கழிபடருறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் = மாய்ந்தோர்மாட்டு அவருக்காக மிகவருந்தி மற்றையோ ரிரங்கும் கையறு நிலைக்காஞ்சியும்; “இளையோர் சூடார், வளையோர் கொய்யார், நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான், பாடினி யணியாள், ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே. ” புறம். 242 இதற்கு, “கணவனொடு மனைவியரும் கழிந்துழி இறந்து படா தொழிந்த ஆயத்தாரும் விறலியரும் தனிப்படருழந்த செயலறு நிலைமை” எனக் கூறுவர் நச்சினார்க்கினியர்; அது மற்ற மூதானந்தம் கையறுநிலைகளு ளடங்குதலின் ஈண்டுப் பொந்தாமை யறிக. 16. காதலியிழந்த தபுதாரநிலையும் = அன்புடை மனைவியையிழந்த கணவனது தபுதாரநிலைக் காஞ்சியும்; “ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன குறுந்தொடி மகளி ரிழைநிலை நெகிழ்த்த மன்னற் கண்டிகும், கழைக்க ணெடுவரை யருவி யாடிக் கான யானை தந்த விறகிற் கடுந்தெறற் செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடை புளர்த்து வோனே. ” - புறம். 251 குறிப்பு : “தாரம்தபு” என்பது “தபுதாரம்” என நிலைமாறி நின்றது; முன்றில், கடைப்புறம் என்பனபோல. அதனால் சொல்மாற்றி, “தாரம்தபுநிலை = இல்லாளையிழந்த நிலை” எனப் பொருள் கொள்ளற்பாற்று. தபுதல் = கெடுதல்; அதாவது இழவு. 17. காதலனிழந்த தாபதநிலை = காதற் கணவனையிழந்து தவிக்கும் மனைவிநிலை குறிக்கும் தாபதநிலைக் காஞ்சியும்; |