பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை259

19.   மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வற் பயந்த தாய்தப வரூஉந் தலைப்பெயனிலையும் = பெருஞ்சிறப்பொடு களத்துப் பொருது மாய்ந்த மகனைப் படையிழிந்து மாறினன் எனப் பிறர் பழிகூறக் கேட்ட தாய், அன்னவனை யீன்றமைக்கு நாணித் தன்னுயிர்விட முனைந்து களஞ்சேருந் தலைப்பெய னிலைக்காஞ்சியும்;

“நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோண்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறின னென்று பலர்கூற,
மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்
முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக்,
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களந் துளவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே”

- புறம். 278

“கடல்கிளர்ந் தன்ன” என்னும் ஒளவையார் புறப்பாட்டும் இத்துறையேயாம்.

இனி, “மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயர” எனப் பாடங்கொண்டு, “சிறப்பழியப் புதல்வன் புறக்கிட” எனப் பொருள்கூறி, அதற்குத் தகடூர் யாத்திரைப் பாட்டின் பகுதியை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர். அது, தாயின் மூதின் மறம் பேணினும், மகனைப் புறக்கொடைப் பழி பூணவைப்பதால், அப்பாடத்தினும் “புதல்வற் பயந்த” இளம்பூரணர் பழம்பாடமே பொருட்சிறப்புடைத்து.

20.   மலர்தலை யுலகத்து மரபு நன்கறியப் பலர் செலச் செல்லாக்காடு வாழ்த்தொடு = விரிந்த இடத்தையுடைய உலகத்து இயல்முறை நன்றாய் உணருமாறு பல்லோரும் மாய்ந்தொழியத் தான் ஒழியாது நிற்கும் புறங்காட்டை வாழ்த்தும் காஞ்சியுடன்;

பனிப்பழுநிய பல்யாமத்து எனும் கதையங்கண்ணனார் புறப்பாட்டில்,

“. . . . . . . . . . . . . . . . . . . . . .
நாடென மொழிவோ ரவனாடென மொழிவோர்,
வேந்தென மொழிவோ ரவன்வேந்தென மொழிவோர்,