பக்கம் எண் :

260நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீ றவிப்ப
எல்லார் புறனும் தான்கண் டுலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்பறி யாதே. ”

- புறம். 356

என்பது இத்துறை.

நிறையருஞ் சிறப்பில் துறைஇரண் டுடைத்தே = நிரம்பிய அரிய சீருடை காஞ்சித் துறைகள் இருவகைக்தாம்.

குறிப்பு : இதில் ஆன் எல்லாம் அசை. ஏகாரம் ஈற்றசை; இசைநிரப்பெனினும் அமையும்.

முதலில் ஒருபத்தைக் கூறி, “நிலையொடு தொகைஇ ஈரைந்தென்ப” என எண்கொடுத்துப் பிரித்து நிறுத்தியதுடன், ‘என்ப’ என முற்றுவினை பெய்துமுடித்தலின் அது பிறர்கோள் கூறியதாகும். காஞ்சித்துறை அப்பத்தே என்பது அவர் காலத்து ஒருசாரார் கொள்கையாதலின், அவற்றைத் தொகுத்துத் தனிஎண் கொடுத்துப் பிரித்தார். அது தானுடன்படாப் பிறர்கோளெனற்கு ‘என்ப’ எனப் படர்க்கை வினைமுற்றுப்பெய்து, பின் தம் துணிபு விளக்கி மற்றொருபத்தும் சேர்த்துக் காஞ்சித்துறை இருவகையாய் இருபதாமென முடித்தார். இனி, முதல்பத்தை ஈரைந்தாகும் எனப்பிரித்து நிறுத்தியதால், பின்கூறிய பத்தையும் பத்தெனத் தொகுத்துச் சுட்டியேனும், அல்லது முன் பத்தோடு கூட்டி எண்ணித் துறை இருபதெனச் சுட்டியேனும், இறுதியில் மொத்தத்தொகை எண் கூறுதல் வேண்டும். ஈற்றடி, “துறை ஈரைந்தே” என்றேனும், அன்றித் “துறை இருவகைத்தே” என்றேனும் முன் பாடம்இருந்து பின் அது சிதைந்து இருத்தல் கூடும் எனத் தோன்றுகிறது. இதில் பின்கூறிய துறை பத்தும் துன்பநிலை குறிப்பதால் இவை விழுமவகையாதல் வெளிப்படை; அதனால் விழுப்ப வகையாக முதற்கூறிய துறை வகை பத்தின் வேறாகும் பின்பத்தும் என்பது விளங்குகிறது. இத்தன்மை வேறுபாட்டால் இச்சூத்திரங்கூறும் காஞ்சித் துறை இருபதும் ஒருபடித்தாய் நிரல்பட எண்ணாமல் வகைக்குப் பத்தாய்ப் பிரித்துத் தொகுத்து இருவகைப்படுமெனத் தெரிக்கப்பட்டன.