பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை263

பொருந்தாப் பெருந்திணை போன்ற பழிபடும் இழி காமவகை விலக்கித் தூய காதற் பகுதிகளிலும், புகழ்மை பாராட்டுதற்கேற்ற கூறு பாடாண் எனப் பெறும். (பாடாண் = பெருமை, அஃதாவது பீடு) அவ்வத்திணைப் பொருளின் மேல் அதிற் சிறந்த ஒருவரின் புகழ் பாராட்டும் பகுதியளவே பாடாணாகும். சிறப்பெதுவும் புகழ்க்குரிய யாதாமோரொழுக்கம் பற்றியன்றி யமையாதாகலின், அச்சிறப்பின் புகழாம்பாடாணும் அவ்வத்திணைப்புறத்துப் பிறத்தலே இயல்பாகும். ஆதலின், பாடாண் பிற திணைகளின் சார்பாய்ப் புகழ்மைப் பொருட்டாயமையதல் வெளிப்படை. இனி, அகப்புறத் திணைகளனைத்தும் மக்கள் ஒழுக்கம் பற்றியவையாதலின் பாடாணும் மக்கட்குரியதே யாதல் வேண்டுமாதலானும், பண்டைச் சான்றோர் பாடாண் பாட்டுக்களெல்லாம் மக்களில் தக்கார் மாண்புகழாகவே வருதலானும், சூத்திர வைப்பு முறையில் தொல்காப்பியரின் மாறாத நியமப்படி இது பாடாணினியல் விளக்கம் கூறவேண்டும் சூத்திரமாதலானும், சூத்திரச் சொற்போக்கால் தொல்காப்பியர் கருத்தறிதல் உரையறமாதலானும், சூத்திரச் செம் பொருளிதுவாதல் ஒருதலை.

இனி, இச் சூத்திரச் சொற்பொருளை வைப்புமுறையில் இடத்திற்கியையக்கொள்ளாமல் முன்னுரைகாரர் முரண்படத் தத்தம் விருப்பின்படி வெவ்வேறாய்க் கூறுவர். அவருரை நெடுவழக்கால் புலவரை மருட்டுதலால், மெய்ப் பொருளறிய அவருரைப்பெற்றி யாராய்தலும் பொருத்தமாகும்.

இதற்கு இளம்பூரணர் உரையாவது:

“அமரர்கண் முடியும் கொடிநிலை கந்தழி வள்ளி புலவராற்றுப்படை புகழ்தல் பரவல் என்பனவற்றினும், குற்றந்தீர்ந்த (ஐந்திணை தழுவிய அகமான) காமத்தைப் பொருந்திய வகையினும், அவற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண்டிணையாதற்குப் பொருந்தும்”, என்பதே.

“கொடிநிலை முதலிய ஆறும், கடவுட்புகழ்ச்சியன்றிப் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வருதல், காமப்பகுதியிற் பாடும் பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி வருதல், என்ற இவ்விருவகையானும் ஒருவனைப் புகழ்தலால் பாடாண் பாட்டாயிற்று” என்பது இச்சூத்திரத்தின் கீழ் இளம்பூரணர் தரும் சிறப்புரையாகும்.