பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை265

இலக்கணநூல் நோக்குக்கும் தொல்காப்பியர் சொற்போக்குக்கும் பொருந்துவதன்று. இந்நூலார் தாமே வரையறை செய்திலரெனில், அஃது அவர் நூலைக் கற்பவரை மயங்க வைக்கவும் மாறுகூறவும் இடந்தரும் இழுக்காய் முடியும். அவர் கூறும் அறுவகையினை அவர் நூலிலிருந்தேகண்டு தெளியாமையானே, உரைகாரர் பலரும் பலவாறு தத்தம் மனம்போன வாறெல்லாம் மயங்கி மாறுபடக் கூறற்கிடனாயிற்று. இதனாலன்றே நச்சினார்க்கினியர் ஈங்கு அறுவகையினைப் பரவும் வகையாக்காமல் பரவப்படும்செயற்கைக் கடவுட் போலிகளாம் தேவர் - பார்ப்பார் - பசு - மழை - மன்னர் - உலகு என்றெண்ணினார். இதற்கு மாறாக இளம்பூரணர் ஈண்டு அறுவகையை வணங்கப்பெறும் பொருள்களாக்காமல் வணக்கவகைகள் ஆறெனக்கொண்டு, “கொடிநிலை கந்தழி வள்ளி புலவராற்றுப்படை புகழ்தல் பரவல்” என்று கூறுவர். கற்றுவல்ல இருபேருரைகாரர் இதற்கு இவ்வாறு வெவ்வேறு பொருள் தம்முள்முரணிக் கூறுவரேல், மற்றையோர் உண்மை துணிவதெப்படிக் கூடும்? இவ்வாறு பலரும் பலவாறு கூற இடம்வைத்துத் தெளிவின்றி மயங்குமாறு தொல்காப்பியர் சூத்திரியாரென்பது ஒருதலை. அவர் தேர்ந்து தெரிக்க நுதலிய பொருளை நுவலும் இச்சூத்திரத்து அறுவகைகளை அவர் நூலிற் கண்டு தெளிவதே கற்பவர்கடனாகும்.

2. இனி, நச்சினார்க்கினியர் உரையில், நேரே பராவப்படும் பிறப்புவகையால் இயற்கைத் தேவராவார் வேறு; தேவராய்ப் பிறவாவிடினும் வைதிகர்வாய்ச் சிறப்பு வகையால் தாம் பெறும் வணக்கத்தை மெய்த்தேவர்பால் உய்க்கும் பொய்த்தெய்வப்போலிகள் வேறு ஆறு எனக் கூறப்படுகிறது. எனவே, இவ்வுரை அசலும் படியுமான தெய்வப் பகுதிகளிற் சென்று சேரும் வணக்கவகையெல்லாம் ஒருங்கு தொகுத்து இச்சூத்திரங் கூறவேண்டுவது ஏழுவகையாகவும், இந்நூலார் சூத்திரத்தில் அறுவகையென மறந்து கூறினரெனத் தொல்காப்பியரைப் பழித்ததாகும்.

3.   இன்னும், இயற்கை வகைப் பிறவித்தேவரன்றியும், பராவுவெறியான் மக்கள் தாமே “விகாரவகையான்” அமரராக்கிச் செய்யும் வாழ்த்துப்பெறும் செயற்கைப் பொய்த்தேவப் போலிகள் நச்சினார்க்கினியர் கூறுமாறு ஆறே எண்ணில் அமைவனவன்றே. புள், விலங்கு, ஊர்வன, யாறு, மலை, மரம், செடி, கொடியாகிய பொருள்களில் வாழ்த்துக்கடியப்படுவ தொன்றேனுமுண்டோ?