பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை271

கூறிய குறிப்பினும் = பண்டைச் சான்றோர் செந்துறை வழக்குச் சுட்டும் பிறவிடத்தும்; செந்துறை வண்ணப்பகுதி வரைவின்று = இயற் பாக்களேயன்றி இசைவகை வண்ணக் கூறுகளும் விலக்கப்படா.

குறிப்பு : “ஆங்கு” உரையசை. ஏகாரம் ஈற்றசை. உம்மைகள் எண் குறிப்பன. செந்துறையாவது, இசைத் தமிழ்ப்பாட்டு வகை. வண்ணம் என்பது இசைக்குரிய ஓசை வேறுபாடு. பிறதிணைகளிற் போலப் பாடாணிலும் இயற்பாக்கள் பெரிதும் வழங்கும்; எனில், இங்குக் குறித்த சில பாடாண்வகைகளுக்கு மட்டும் இயற்பாக்களேயன்றி இசைப்பா வண்ணக்கூறுகளும் வந்து பயில்வதுமுண்டு என்பதே இச்சூத்திரக் கருத்தாகும். அது, “வண்ணப்பகுதி வரு”மெனக் கூறாது, “வரைவின்று” என்றதனால் விளங்கும். பாடாணில் பெரிதும் பயில்வன இயற்பாக்களே; இசைப்பா வண்ணவகை சிறுவரவிற்றே; அதுவும், இங்குக் குறித்த வகைகளில் மட்டுமேயாம். இதில் முன்னோர் கூறிய குறிப்பென்றது, பரவலும் புகழ்தலுமல்லாப் பிறதுறைகளை; குறித்த அவ்விரண்டிலும் செந்துறை வண்ணம் சிறப்புடைத்தாகும்; மற்றைய பாடாண் துறைகளில் பண்டைச் சான்றோர் செந்துறைக்குரியவெனக் குறித்தவற்றிற்கே இசைப்பா வண்ணம் ஏற்புடைத்து; அல்லனவெல்லாம் இயற்பாக்களே ஏற்குமென்க.

புகழ்ச்சிப்பாடாண் வகைக்கு ஒழுகுவண்ணக் செந்துறைப் பாவகை வருமாறு :

“அட்டா னானே குட்டுவன்; அடுதொறும்
 பெற்றா னாரே பரிசிலர் களிறே;
 வரைமிசை யிழிதரு மருவியின் மாடத்து
 வளிமுனை யவிர்வருங் கொடிநுடங்கு தெருவில்
 சொரிசுரை கவரும் நெய்வழி யுராலிற்
 பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல
 நன்னுதல் விறலிய ராடுந்
 தொன்னகர் வரைப்பினவ னுரையா னாவே”

- பதிற்றுப்பத்து, செய். 47

இதில், செங்குட்டுவன் கொடையும் வென்றியும் கபிலர் புகழ்தலால், இவ்வொழுகுவண்ணச் செந்துறைப் பாவகை ஏற்புடைத்தாயிற்று.