| 272 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இனி, வாழ்த்துப்பாடாண் வகைக்கு வண்ணச் செந்துறை வருமாறு : “பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி ஒண்ணுதல் விறலியர்க் காரம் பூட்டிக் கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக் கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ! ஆண்டுநீர்ப் பெற்ற தார மீண்டிவர் கொள்ளாப் பாடற் கெளிதினி னீயும் கல்லா வாய்மைய னிவனெனத் தத்தங் கைவ லிளையர் நேர்கை நிரைப்ப வணங்கிய சாயல் வணங்கா வாண்மை முனைசுடு கனையெரி யெரித்தலிற் பெரிதும் இதழ்கவி னழிந்த மாலையொடு சாந்துபுலர் பல்பொறி மார்ப! நின் பெயர்வா ழியரோ, நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தருந் தீநீர் விழவில் பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை மேவரு சுற்றமோ டுண்டினிது நுகருந் தீம்புன லாய மாடுங் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே” - பதிற்றுப்பத்து. செ. 48 செங்குட்டுவனைக் கபிலர் பாடிய இப்பாட்டில் “பெருந்துறை மணலினும் பலவே, நின்பெயர் வாழியர்” என வருதலால், இது வாழ்த்துப்பாடாண்; அதனாலிதற்கு ஒழுகு வண்ணச் செந்துறைப் பாவகை ஏற்புடைத்தாயிற்று. இனி, இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருந்தாப் புத்துரைக் குறிப்பைச் சிறிதாராய்வோம். “வண்ணப் பகுதி” என்னும் தமிழியற்றொடருக்குரிய செம்பொருளை யிகழ்ந்து விலக்கி, “வண்ணம்” எனுந் தமிழ்ச் சொல்லை “வருணம்” என்னும் வடசொல்லின் சிதைவாக் கொண்டனர். கொண்டு, “வண்ணப்பகுதி வரைவின்று” என்பதற்கு, “வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்கும் நிலைமையின்று” என்று பொருள் கூறினார். “‘வண்ணமும் தொடையும் பொரீஇ யெண்ணா’ என்பவாகலானும், ஐவகை நிறத்தினையும் வண்ணமென்ப |