பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை273

வாகலானும், வண்ணமென்பது இயற்சொல்; வருணமென்பது வடமொழித்திரிபு” என்றவரே தெளிந்து கூறினர்; எனினும் சூத்திரத்தில் அத் தமிழ்ச் சொல்லுக்குரிய பொருளை விட்டுத், தாம் கருதிய ஆரிய மரபைப் புகுத்தி மரபு பிறழப் புத்துரை கூறுவர். இஃதவர் மனப்பாங்கிருந்தவாறு. பட்டாங்கே இயலடைவில் நிரல்நிரையேசொற்கிடந்தவாறு கண்ணழிப்பின், சூத்திரச் செம்பொருள் தெளிதலெளிது. அதை விலக்கிச், சுண்ணம் மொழிமாற்று முதலிய அரிய மாட்டேற்று மத்துக்களால் கலக்கி, எவ்வாற்றானும் ஒவ்வாப் புதுப் பொருள் காணத் துணியுமிவரியல்பிற்கிது நல்ல சான்று. சொற்றொடர் சுட்டும் செம்பொருளை இவரே குறிக்கின்றார். அதைக் கொள்ளாமைக்கிவர் இரண்டேதுக்கள் கூறுகிறார்.

(1)  “இதிற் குறித்த பாடாண் பகுதிகள் ‘செந்துறை மார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல்பற்றிவரும்’ என்பது. . . கூறின், அவை ஈண்டுக்கூறல் மயங்கக் கூறலாம்.

(2)  அன்றியும், ஏனை அறுவகைத் திணைக்கும் இங்ஙனங் கூறாது இத்திணைக்கே உரித்தாகக் கூறுதற்கோர் காரணமின்மையானும் அங்ஙனங்கூறாரென்க. ”

இவற்றுள் முதலது இடம்பற்றியது. செய்யுளியற்குரிய பாட்டுவகை புறத்திணை யியலிற் கூறுதல் பொருந்தாதென்பதே, சொற்பொருளை விட்டொழிக்க விரும்புதற்கிவர் கூறும் காரணம். இந்நூற்பா சுட்டும் பாடாண் பகுதிகள் ‘செந்துறை மார்க்க வண்ணப்பகுதியாகிய பாடல்பற்றி வரு’மென்பதே நேரிய பொருளென்றுடன்படுகிறார். ஆனாலும், செய்யுளியற்குரிய பாவகை கூறுதலால், அச்சொற்பொருளைக் கொள்ளலாகாதென விலக்குகிறார். இஃதிவர் பொருந்தாப்புத்துரைக்குப் போதாதென்பதும், புறத்திணை யியலில் சில பாடாண்பகுதிகளுக்குச் சிறந்துரிய பாவகை சுட்டுவது இயலமைவுடைத் தென்பதும், தொல்காப்பியர் மரபு முறை மறவார்க்கெளிதில் தெளிவாகும். அகப்புறத்திணைகளுக்குப் பொதுவான பா வகைகள் செய்யுளியலில் விளக்குவதால், திணைதோறும் அவ்வதற்குப் பாவகை கூறல் மிகையாகும். அதனால் தொல்காப்பியர் பிற புறத்திணைகளுக்குப் பாவகை தனித் தனி கூறிற்றிலர். எனில், செந்துறைப் பாடல் பிறதிணைகளுக்குப் பயிலாமல், பாடாணிலும் யாண்டும் பயிலாமல், “பரவலும்