பக்கம் எண் :

274நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

புகழ்ச்சியும் முன்னோர் குறிப்புமான” பகுதிகளுக்கு மட்டுமே பொருந்துமாதலின், அப்பொருத்தம் இவ்வியலிற் பாடாண் பகுதியொடு சேர்த்துக் கூறப்பட்டது. இவ்வாறு, ஏற்ற சில பிறவிடத்தும் பொதுவின்றிச் சிறப்பாகத் தனியுரிமையுடைய பாவகைகளைச் செய்யுளியலிற் கூறாமல் ஆங்காங்கே சுட்டுவது இந்நூலாரியல்பாகும்; அகத்திணைகளுக்குக் “கலியும் பரிபாடலும் உரிய” என்றகத்திணை யியலிறுதியிலும், அதுவே போல உவமவகையான உள்ளுறையுவமத்தை உவமவியலில் கூறாமல், பெருந்திணை ஒழியப் பிற அகத்திணைகளுக்குச் சிறப்புரிமை கொள்ளுவதால் அகத்திணை யியலினும், அவ்வாறே உவமத் தொடர்புடைய இறைச்சி முதலிய சில உள்ளுறைகளைப் பொருளியலிலும் விரித்து விளக்குதலறிக. எனவே, தன்னளவில் தவறற்றதாய், எளிதிற் பொருள் தெளியப் படுவதாகும் நேரிய சொற்பொருளை, இதிற் குறித்த பாடாண் வகைக்குரிய பாவகையைச் செய்யுளிலியற் கூறாமல் இங்குத் தொடர்பு கருதிப் பாடாண் பகுதியொடு இவ்வியலிற் கூறியதால் மட்டும், மயக்கம் தருமென விலக்குமாறில்லை. எவ்வாறாயினும் பண்டைத் தமிழ்த்திணை விளக்கும் பகுதியில், யாதும் பொருத்தமற்ற ஆரியரின் சாதிபேத ஏத வேறுபாடுகளைப் புகுத்தும் நச்சினார்க்கினியர் முயற்சி வியப்பொடு வெறுப்பை விளைப்பதாகும். ‘எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும்’ எனும் தமிழ் மரபொடு முற்றுமுரணுவதும் பிறப்பால் என்றுமாறாத உயர்வு தாழ்வுடையதுமான ஆரிய வருண முறைகளைப் பழைய தமிழர் புறவொழுக்கம் கூறுமிடத்துப் புகுத்த முயன்றிடர்ப்படுவதினும், பிறதிணைகளுக்கும் பாடாணில் பிறபகுதிகளுக்கும் பயிலாத செந்துறை வண்ணப் பாடல் இதிற் குறித்த சில பாடாண் பகுதிகளுக்கு விலக்கில்லை என்பதைப் புறனடையாக இந்நூலாரிங்குத் தெளிக்குமுண்மை தேர்வதே பெரிதும் நயமும் பொருத்தமும் பயனுமுடைத்து.

சூத்திரம் : 28 
 காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்

கருத்து : இது, “புரைதீர் காமம் புல்லிய பாடாண் பகுதி ஒரோவிடத்துக் கடவுளர்க்கும் விலக்கில்லை” என்று கூறுகிறது.