| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 275 |
பொருள் : காமப் பகுதி = பாடாண் வகையுள் புரைதீர் காமம் புல்லியபகுதி; கடவுளும் = (மக்களே யன்றிக்) கடவுளரும்; ஏனோர் மருங்கினும் = (தம்முள்ளும்) பிறரோடும்; வரையார் = கடியமாட்டார்; என்மனார் புலவர் = என்று கூறுவர் புறநூற்புலவர். குறிப்பு : இதில், உம்மையிரண்டும் சிறப்புக் குறிப்பாம்; மக்கட்கன்றி, கடவுளர்க்கும் தூய காதற்பகுதி பாடாணாதற்குரித்து; காதலியல்கருதா மேதகு கடவுளரும் இருதலையும் தாமாயும் ஒருதலை மனிதரோடும் காதல் கூரும் நற்காமப்பகுதியும் பாடாண்வகையாதலுண்டு என்பது குறிப்பு. புரைதீர்காமப் பாடாண் மக்களோடு தேவரும் சேர்வதுண்டு என்பது இந்நூற்பாக் கருத்து. தூய காதல் பாடாணாதற்குரிய தென்பது, மேல் “அமரர்கண் முடியும்” என்ற சூத்திரத்தில் ‘புரைதீர்காமம் புல்லிய வகையினும்’ என்றதனால் விளக்கப்பட்டது. காதல் பெரும்பாலும் இருமருங்கும் மக்கட்டலைவரிடை நிகழ்வதியல்பு. ஒரோவழி, ஒரு கடவுள் பிறகடவுளோடும் அன்றிக் கடவுளல்லாப் பிறமனிதரோடும் காதல் கொள்வதும், அது குற்றமற்றதாயின் ஏற்புழிப் பாடாண் பகுதியாவதும் செய்யுளில் கடிதலில்லை என்றிதில் கூறப்படுகிறது. மேற்பாடாணியல் விளக்கத்தில் புரையுடைக் காமமே கடியப்பட்டுக் கடவுளர் தூயகாதல் விலக்காமையாலிது வேண்டாமெனின், திணையெல்லாம் மக்களொழுக்கம் பற்றியவாதலின் பாடாண்திணை கடவுளர் தூயகாதல் பற்றி வருமோ எனும் ஐயமகற்ற இது வேண்டுமென்க. பொதுவாய்ப் பொருளெல்லாம் மக்களின் அகமும் புறமுமாய ஒழுக்கங்களைப்பற்றியனவாகும். புறத்திணை ஏழனுள் இறுதியான பாடாணும், மற்றைய போலவே மக்கட்டலைவர் மேற்றாய், ஒன்று “அமர்கொள் மரபின்” அறுபுறத்திணை யினடியாய் வரும், அன்றி அகவகையில் புரைதீர் காமம் புல்லிவரும். இவ்விருவகையுள், “மறனுடை மரபின் பாடாணாறும்” மக்கண் மேற்றாய்ச் செய்யுளில் வழங்கும். ‘புரைதீர் காமம் புல்லிய பாடாணும்’ மானிடத் தலைமக்கள்மாட்டு வருதலே பெருவழக்காம். சிறுவரவிற்றாக, காதல் கண்ணிய பாடாண் கடவுளரிடையும் மக்களொடு கடவுள் காதல் கொள்ளுமிடத்தும் வருதலும் புலனெறி வழக்கில் விலக்கில்லை எனும் பழமரபு கூறப்பட்டது. கடவுள் கடவுளொடு காதல்கொண்ட புரைதீர் காமப் பாடாணுக்குச் செய்யுள் வருமாறு: |