| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 277 |
குறிப்பு : உம்மை சிறப்புக்குறிப்பது. காதற்செவ்வி கருதவொண்ணாப் பேதைப்பருவச் சிறார்மாட்டும் நற்காமப் பாடாண்திணை புலனெறிவழக்காற்றில் உரிமை கொள்ளும் என்பது கருத்து. காமவுணர்வு குழவிக்கின்றெனினும், அக்குழவி-மாட்டுத் தூயகாதல் கொள்வாரன்புப் பெற்றி பற்றிய பாடாண் அக்குழவியர்மேல் சார்த்தி வருவதே இதிற் கூறப்படுவது. காமப்பருவமுடையார் சிறாரைக் காதலிக்குங் கைக்கிளைப் பாடாண் புரைதீர் காமம் புல்லிய பாடாணா யடங்கும் பெற்றி மேலே கூறினார்; அத் தூய காதலால் குழவியர்பாற் சாரும் பாடாண் பகுதியை இங்குக் கூறினார்; அதனாலிது கூறியது கூறலாகாது. இதற்குச் செய்யுள் வருமாறு: “பொன்திகழ்தன் மார்பென் புறந்தோயச் சாய்ந்தென்கண் தன்காந்த ளாற்பொத்தித் தான்சிரிக்கும் - முன்வந்தென் கன்னத்தை முத்திக் கழுத்தைக்கை யாற்றழுவும் என்னத்தன் என்வாழ் வினி” இது, காமஞ்சான்ற பெண்ணியலாள் அஃதுணரா ஆண்மகவை யன்புசெய்து பாராட்டும் பாடாணாகும். இனி, காமஞ்சாலா இளமையோள்வயின் காளைப் பருவத் தலைவன் தூய காதல் பாடாணாதற்குச் செய்யுள்: “வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்தோள் பேரெழில் மலருண்கட் பிணையெழின் மானோக்கிற் காரெதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதற் கூரெயிற்று முகைவெண்பற் கொடிபுரையு நுசுப்பினாய்! நேர்சிலம் பரியார்ப்ப நிரைதொடிக்கை வீசினை, ஆருயிர் வௌவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள். உளனாவென் னுயிரையுண் டுயவுநோய் கைம்மிக இளமையா லுணராதாய்! நின்தவ றில்லானும், களைநரி னோய்செய்யுங் கவினறிந் தணிந்துதம் வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்! . . . . . . . . . . . . . . . . . . ஒறுப்பின்யா னொறுப்பது நுமரையான் மற்றிந்நோய் பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் பொலங்குழாய்! மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி நிறுக்குவன் போல்வல்யான், நீபடு பழியே” |