பக்கம் எண் :

280நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

தலைமக்களின் உயர்குடிப் பிறப்பே உரித்தாமன்றி, வாளா வருண வகை சுட்டல் போதாது. பிறப்பளவில் சிறப்புச் சொல்லி இறுமாக்கும் வருண வகை பழைய தமிழ்மரபுமன்று. “ஆன்ற குடிப்பிறப்பே வேந்தவாம் பண்பாகத்” தமிழறநூல் கூறும். ஆதலின், இதிற் பொலிவு சுட்டும் தோற்றச் சொல், பீடுடைய தலைமக்கள் பிறந்த குடிப்பெருமையைக் குறிப்பதல்லால், வேதங்கூறும் சாதியைச் சுட்டாது.

(2)  இனி, “ஊரும் பெயரும்” எனு மரபியர் சூத்திரம் நுதலும் பொருளும் இடஇயைபும் வேறு; அச்சூத்திரமே இடைச்செருகல் என்பாருமுளர். இன்னும், பின் மரபியற்சூத்திரம் ஊர் குறிப்பதால் ஈண்டைக்கேற்ற ஊர் கொள்ளலாகாதெனின், ஆண்டுப் பெயரும் மரபியற் சூத்திரம் சுட்டுவதால் இங்கிப்பகுதியில் பெயர் குறிப்பதும் பிழையாதல் வேண்டும். அதற்குமாறாகப் பாடாண் தலைமக்களின் பெயர் கூறப்பெறுமென்பது இதையடுத்து “மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே” எனக் கூறப்படுகிறது. ஆகவே, பாடாண்தலைவரின் ஊரும் உயர் குடிப்பிறப்பும் பெயருமே அத்திணைப் பகுதியில் கூறுதல் மரபென்பதே. இதுவும் இதையடுத்த பின் சூத்திரமும் விளக்கும் பொருளாதல் தேற்றமாகும். தலைமக்கள் அகத்திணைப் பகுதியில் “சுட்டி யொருவர் பெயர் கொளப்பெறார்” என விலக்கியதால், புறத்தில் புரைதீர் காமம் புல்லிய பாடாண் பகுதியில் அவர் ஊரும் குடிப்பிறப்பும் பெயரும் சுட்டுதல் விலக்கின் றென்பதை ஈண்டைக்கேற்ப இப்புறத்திணையியலில் இயையக் கூறினர் இந்நூலார்.

இதற்கிளம்பூரணர் உரையும் சிறவாது. “‘ஊரொடு தோற்றம்’ என்பது, பேதை முதலாகப் பேரிளம் பெண்ணீறாக வருவது” என்றவர் கூறினர். மலைகலங்கினு நிறை நிலைகலங்காத் தமிழ் மகளிரெல்லாம் ஓரேதிலனுலாவில் உயிரினும் சிறந்த தம் நாணினுஞ் சிறந்த கற்பிழந்து காமவெறி கொள்ள வைத்துப் பழிபிறங்கும் பிற்காலப் பிரபந்தங்களை அமைப்பதற்கு இப்பொருள் கொண்டார்போலும். நிறையுடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார், அதற்கு மாறாகத் தந்நெஞ்சிற் பிறரைப் புகுத்துவர் பெண்டிரெனும் புலனெறியைத் தொல்காப்பியர் நூலுட்காண முயல்வது “சுடருள் இருள்காண்ப”தாகும்.

ஊர் குறித்தல் உரித்தாகும் பாடாண் பாட்டு வருமாறு: