பக்கம் எண் :

284நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

முடியுமெனக் குறித்த மூன்றும் ‘மறனுடை மரபிற்’ போர் துவக்கும் புறவொழுக்காம் ஒரேதன்மைய வென விளங்க “முதலன மூன்றும்” என்றொரு நிரலில் சுட்டப்படுதலானும், அவற்றுள் கொடிநிலையும் வள்ளியும் போர்த் துவக்கத்தில் நிகழும் வெட்சி வகைகளாய் முன் விளக்கப்பட்டன வாதலானும், அவற்றுடன் பொருந்த ஒருங்கு சுட்டப்படும் மற்றொன்றுமவைபோலவே (இங்கு விளக்காமல்) முன் விளக்கப்பட்ட ‘போர்த்துவக்க வெட்சிவகையாதல்’ வேண்டுமாதலானும், இவ்வியலில் முன் வெட்சித்துறைகளுள் முதலில் முருகக் கடவுள் வாழ்த்துடன் போர் துவக்குவதாய் விளக்கப்பட்டது “காந்தளா”தலானும், அதை யிங்குச் சுட்டாது விட்டுக் கடவுள் வாழ்த்தொடு வரும் வெட்சிப் பாடாண் வகை ‘முதலன மூன்றும்’ என முற்றும்மை கொடுத்து முடித்தது குன்றக்கூறலெனும் குற்றமாமாதலானும், கடவுள் வாழ்த்தொடு பாடாணாய் முடியும் வெட்சியல்லாப் பிறவஞ்சி வகையை இதன்பின் வறேு சூத்திரத்திற் கூறுதலாலிங்குச் சுட்டிய மூன்றும் வெட்சிவகையாதலே முறையாதலானும், அத்தகைய வெட்சிவகை காந்தள் என்றன்றிக் கந்தழியென முன் சுட்டப்பெறாமையானும், இதிற்கந்தழியிடத்தில்காந்தளே நிற்றற்கு அமைவுடையபாடமாதல் வேண்டும்; நாளடைவில் பொருட் பொருத்தங் கருதாமல் ஏடு பெயர்த்தெழுதும் பரிசால் அது சிதைந்து “கந்தழி”யாகி, பிறகதன் பொருத்தமாராயாதுரைகாரர் தத்தமக்குத் தோற்றியவாறு பொருளுரைக்க அப்பாடமே நிலைத்தது போலும். இயற்பொருத்தம் தேராமல் கண்டாங்குக் கந்தழிப்பாடம் கொண்டவுரைகாரரும், அவருரையால் மயங்கிய பிறரும், அதன் பொருளும் பொருத்தமும் தெளிந்து துணியமுடியாமல் தம்முள் மாறுபட்டு மறுகுவதொன்றே அப்பாடத் தியைபின்மையைத் தெளிப்பதாகும். இதை நச்சினார்க்கினியர் பாடாண் பரிசழித்து அருவான கடவுளாக்குவர்; அது பாடாண் புறத்துறையாகாமையை ஆன்றோர் பழைய செய்யுட்களில் ஆட்சியின்மை வலியுறுத்தும். இளம்பூரணர் கந்தழியியல்பை விளக்காமல் “அன்றெறிந்தானு” மெனும் வெண்பாமாலைப் பாட்டைக் காட்டியமைவர். அப்பாட்டு உழிஞை வகையாதலொன்றே. வெட்சிவகை குறிக்குமிங்கது பொருந்தாமை துணியப் போதிய சான்றாகும்.

இனி, (i) ‘கொடிநிலை’ வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு வருதற்குச் செய்யுள் வருமாறு :