பக்கம் எண் :

286நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

கார்க்காடு நாறுங் களனிழைத்துக் காரிகையார்
ஏர்க்காடுங் காளை யிவன்”

-நச். உரை மேற்கோள்

இதில், பெண்டிர் முருகனைப்பாடும் வள்ளி எனும் வெட்சித்துறை வருதலறிக. இனி, வள்ளி பாடாணாய் வருமாறு :

“பெருங்கட் சிறுகுறத்தி பின்மறுகும் சேயோன்
அருங்குன்றம் பாடுதுநா மன்று - கருங்கடல்மேல்
வேல்விடுத்த வேப்பந்தார் மாறன் தமிழ்வேந்தன்
கோல்வளர வாழ்த்தெடுத்துக் கொண்டு”

இது, மகளிர் முருகனைப்பாடிப் பாண்டியனைப் புகழ்ந்து பரவுதலால், வள்ளிப் பாடாணாதலறிக.

சூத்திரம் : 33 
 கொற்ற வள்ளை யோரிடத் தான.

கருத்து : கடவுள் வாழ்த்துக் கண்ணிய பாடாணாகும் வெட்சிவகை மூன்றை மேற் சூத்திரம் குறித்தது. இது, வஞ்சிவகைக் கொற்றவள் ளையும் ஒரோவழிக் கடவுள் வாழ்த்தொடு பாடாணாமெனக் கூறுகிறது.

பொருள் : வெளிப்படை.

குறிப்பு : முன் சூத்திரம் சுட்டும் வெட்சி வகை மூன்றும் பாடாணாங்கால் எப்போதும் கடவுள் கண்ணியே வரும். அவை போலாது வஞ்சிவகைக் கொற்றவள்ளை பாடாணாங்கால் ஒரோவிடத்து மட்டும் கடவுள் வாழ்த்தைத் தழுவிவரும். எனவே, “வள்ளை கடவுள் வாழ்த்தின்றி மக்கள் சீர்த்திமட்டுஞ் சுட்டிப் பாடாணாய் வரும் பெற்றிய தென்பது பெறப்படும். திணை வேறுபாட்டோடு இத்தன்மை வேறுபாடுடைமையாலும், வள்ளை மற்றவெட்சி வகை மூன்று போலப் போர்க்கு முன்னிகழாமல் தொடங்கியபின் நிகழ்வதாலுமவற்றோடு சேர்க்காமல் பிரித்திதனைத் தனி வேறு நூற்பாவில் விளக்க நேர்ந்தது.