பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை29

பிரிந்துநின்ற பாலையாகவே உருப்படினும்; உரியதாகும் என்மனார் புலவர் = அது பாலைக்குரியதே யாகும் என்று கூறுவர் புலவர்.

குறிப்பு : இதில் இருவகைப் பிரிவென்பதற்கு உரையாசிரிய ரிருவரும் இருவேறுரைகள் தருவாராவர். தொல்காப்பியர் தம் இலக்கண நூலில் யாண்டும் தாம் நுதலும் பொருளை ஐயமற வரையறுத்து விளக்குவதைக் கடனாகக்கொண்டொழுகும் பான்மை பாராட்டத்தக்கது. உரைகாரர் கூறும் பிரிவுவகைகளை அவர் கருதினராயின், அவற்றை இங்கு விளக்காமல் இருவகைப் பிரிவெனப் பொதுவிற்கூறி வேண்டுவோர் வேண்டியாங்கு மாறிப்பொருள் கொள்ளுமாறு வைக்கமாட்டார். தானே வகைகளை விளக்காது தொகையைமட்டும் கூறுவது இலக்கண நூலார் மரபாகாது. அதனால் ஈண்டு ‘இருவகைப்பிரிவு’ என்னுந் தொடர் சுட்டும் வகையிரண்டும், இதனொடு தொடர்புபடத் தொல்காப்பியர் தாமே கூறியவாதல் வேண்டும். முதிர்வேனிற்பிரிவை முன் ஒன்பதாஞ் சூத்திரத்திலும், பின்பனியிலும் பிரிவுண்டென்பதைப் பத்தாஞ் சூத்திரத்திலும்கூறியமைத்தாராதலின், இவ்விரு வகைப்பிரிவு என இச்சூத்திரத்தில் அவற்றைத் தொகுத்துச் சுட்டினாரென்பதே பொருந்துவதாகும். காலிற்பிரிவும் கலத்திற்பிரிவுமென நச்சினார்க்கினியர் கூறுவதே தொல்காப்பியர் கருத்தென்பது அவர் சூத்திரங்களில் யாண்டும் சுட்டப்பெறாமையாலும் அஃது இங்குக் கருத்தன்மையறிக.

இனி, இளம்பூரணர் கொள்கையும் அமைவுடைத்தன்று. “தலைமகளைப் பிரிதலும், அவளையுடன்கொண்டு தமர்வரைப் பிரிதலும்” என்று பிரிவிருவகைத்தாமென்பதிவர் கூற்று. இது தொல்காப்பியர் நூலில் யாண்டும் ஆதரவுபெறாததோடு, தலைமகன் தலைமகளைக் கொண்டுதலைக்கழிதலையும் பாலையென்று பொருளொடு பொருந்தாப் பெயரிடும் இவர் பிழைக்குத் தொல்காப்பியரை யாட்படுத்துவதுமாகும். பிரிவும், புணர்தலேபோல், தலைமகன் தலைமகள் தம்முளாவதோர் ஒழுக்கமேயாதல் வேண்டும். கொண்டு தலைக்கழிதலில் இவ்விருவரும் தலைக்கூடித் தம்முட்பிரியாமல் ஒருங்கு செல்வராதலால், அஃதவர் காதற்றிணையில் பாலையாமாறில்லை. அவர் கூடியிருக்கவும், தலைவி தலைவனுடன் செல்லும் பொருட்டுத் தன் தமரைப்பிரிந்து செல்லல் பாலையெனில், தலைவியைக் காணவருந் தலைவன் தன் தமரையும் பாங்கரையும்