பக்கம் எண் :

312நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

சுவையெட்டோடும் கூட்டி ஒன்று நான்கு செய்துறழ, முப்பத்திரண்டாம்” என அநுமானிப்பர். இன்னும் “பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருள்” என்பதற்கு, “நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும்” எனப் பொருள் கூறி, “கண்ணிய புறனேநானான்கென்ப” என்பதற்கு “அவை கருதிய பொருட்பகுதி பதினாறாகி யடங்கும், நாடக நூலாசிரியருக்கு”, என முடிப்பர். இதில் பொருள் முப்பத்திரண்டென ஒருங்கெண்ணிய பிறகு “அவை கருதிய பொருட்பகுதி” எனப் பிரித்துப் பதினாறெனச் சுட்டுமாறென்னை? ‘பொருள்கள் கருதிய பொருட்பகுதி’ என்பது பொருளில் வெற்றுரையாகும். மேலும், எண்ணான்கு பொருளும் ஓராங்கே ஒருங்கெண்ணப்படுதலின், அவை ஒருதரப் பொருளாதல் ஒருதலை. அதற்கு மாறாக, அவற்றைச் சுவையூட்டும் புலி முதலிய புறப்பொருள் வேறு, அப்பொருள் விளைக்கும் உணர்ச்சி வகை வேறு, உணர்ச்சியால் எழும் உள்ளக்குறிப்பு வேறு, அக்குறிப்பால் நிகழும் உடற்குறியாம் விறல் வேறு எனத் தம்முள் ஒவ்வாநால்வகையாய் உறழப் பிரித்தல் இங்குத் தொல்காப்பியர் கருத்தாமாறில்லை. அன்றியும் எண்ணான்காமவை குறியால் நந்நான்கோரினமாய்க் கண்ணிய புறனே எண்வகை ஆவதை விட்டு, பதினாறாவதெப்படி? புறப்பொருளும் அகவுணர்வும் ஒன்றாமேல், உணர்வெழுப்பும் குறிப்பையும் அதனுடன் நிகழும் விறலையும் வேறுபடுத்துவானேன்?அன்றியும் உணர்வூட்டும் புறப்பொருள் ஒன்றும் இல்லாமலே எண்ணியாங்கே மெய்ப்பாட்டுணர்வுகள் உள்ளத் தெழுமாதலின், எண்வகை மெய்ப்பாடுகளை எனைத்துவகைப் புறப்பொருள்களொடும் கூட்டவும் பெருக்கவும் வேண்டா.

இனி, தொல்காப்பியர் இங்கு விளக்குவது இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பன்றிக் கூத்துறுப் பொன்றுமன்றாதலின், அவற்றைச் சுவையெனவும் விறலெனவும் கூத்தியற் சொற்களால் யாண்டும் குறியாமல், செய்யுளிற் சுட்டற்குரிய மெய்ப்பாடெனவே கூறிப்போந்தார். அன்றியும், புறக்குறியாற் புலனாகும் மெய்ப்பாட்டுணர்வெல்லாம் நந்நான்கும் எவ்வெட்டுமாய்ச் சேர்ந்தே தொகுதியாக இயனெறியாற்றோன்றி வகை பெறுதலான், அவற்றைப் ‘பண்ணைத் தோன்றிய’ எனச்சுட்டினார். தொல்காப்பியரின் இச் சொற்குறிப்புக்களைக் கருதாமல் உரைகாரர் இதில் ‘பண்ணை’ என்பதை மகளிர்