| 314 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இளம்பூரணரும், “நானான் கென்ப” என்பதற்கு அம்முப்பத்திரண்டுமே நந்நான்காய் எண்வகை பெறும் என்னாமல், சுவையும் குறிப்பும் ஆகப் புறத்து நிகழும் பொருள் பதினாறாம் எனப் பொருள் கூறினர்; சுவைகளின் குறியான விறல்கள் புறத்து நிகழ்வன. சுவையும் அவற்றினகக் குறிப்பும் உள்ளுணர்வேயாமாதலின், அவற்றையும் விறல்களுடன் ஒருங்கெண்ணி ஆகப் பதினாறும் ஓராங்கே புறத்துநிகழ் பொருளெனக் கூறுதல் எவ்வாற்றானும் பொருந்தாமை ஒருதலை. ஆதலானும் அது பொருளன்மை யறிக. | சூத்திரம் : 2 | | | | நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. |
கருத்து : இது, முன்னதற்கோர் புறனடை; மேல் முதற் சூத்திரம் கூறும் எண்ணான்குமேயன்றிச் செய்யுட் பொருளாம் மெய்ப்பாடுணர்வுகள் வேறுமுளவென்பது கூறுகிறது. பொருள் : நாலிரண் டாகும் பாலுமாருண்டே = செய்யுளுறுப்பாம் மெய்ப்பாட்டுணர்வுகள், மேற்கூறியாங்கு நந்நான்காய் எண்வகை இயனெறி பிழையாது வருவனவேயன்றி, எவ்வெட்டாய்த் தொக்கு வகைப்பட வருந்தன்மைய பிறவும் உள. குறிப்பு : ஈற்றேகாரம், முதலிற் கூறிய எண்ணான்கினின்றும் வேறும் உள்ளவற்றைப் பிரித்தலின் பிரிநிலை; ஈற்றசையுமாம். ஆகும் என்னும் வினைக்குச் செய்யுளுறுப்பாம் மெய்ப்பாட்டுணர்வுகள் எனும் எழுவாய், கொண்ட பொருட்டொடர்பால், அவாய் நிலையிற் பெறப்பட்டது. மார் - அசை. முன், முதற் சூத்திரத்தில் மெய்ப்பாட்டுணர்வாம் எண்ணான்கு செய்யுட் பொருளும் நந்நான்காய்த் தொகைஇ வருமெனச் சுட்டியதற்கேற்ப, அவ்வாறு தொக்க எட்டும் இதன்பின், “நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன் றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப” |