| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 315 |
எனத் தொகுத்துக் கூறப்பட்டு, அதன்பின் அவ்வெட்டன் வகையாய்ப் பிரத்தெண்ணப்படுவன முப்பத்திரண்டும் முறையே எள்ளல் முதல் விளையாட்டீறாக விரிக்கப்படுகின்றன. அதுவேபோல், வேறு எவ்வெட்டாய்த் தொகுத்து எண்ணப்படும் இயல்புடைய முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும், மேல் “அப்பாலெட்டே” எனவும் இங்கு “நாலிரண்டாகும் பாலுமா ருண்டே” எனவும் சுட்டியதற்கேற்ப முதல் எட்டு வகை முப்பத்திரண்டும் எள்ளல் முதல் விளையாட்டீறாய் முறையே எண்ணி முடிந்த பின், “ஆங்கவை யொருபா லாக வொருபால்” எனத் தொடங்கி “உடைமை இன்புறல். . . . நடுக்கெனாஅ. . . . இவையும் உளவே அவையலங் கடையே” என வேறுமுப்பத்திரண்டு எண்ணி முடித்துக் காட்டப்படுதலின், இச்சூத்திரப்பொருள் இதுவாதல் தெற்றென விளங்கும். இச் செம்பொருளைவிட்டு இதுசுட்டும் நாலிரண்டும் பின் “நகையே அழுகை” என எண்ணப்படும் எட்டுமே ஆமென்பாருரைகொள்ளின், அச் சூத்திரமே ‘அப்பாலெட்டே மெய்ப்பாடென்ப’ என அவற்றின் எண் தொகை கூறுதலானும், முதற் சூத்திரத்தும் “நானான்காய் எண்ணான்கு பொருளாம்” என அவற்றின் எண்வகை குறிக்கப் பெறுதலானும், இச் சூத்திரம் இங்கு வேண்டப்படாது மிகைபடக் கூறலாய் முடியுமென்பது ஒருதலை. ஆதலின், அது பொருளன்மையறிக. இனி, உய்த்துக் கொண்டுணர்தல், இரட்டுற மொழிதல் எனும் உத்திகளால் இச்சூத்திரத்துக்குப் பிறிதும் ஒருபொருள் கொள்ளுதலும் பொருந்தும். இதில் “நாலிரண்டு” என்பதை உம்மை தொக்க கூட்டெண்ணாக்கி, நாலுமிரண்டு மெனக்கூட்டி, அறுவகைப்படும் இயல்புடைய அகத்துறை மெய்ப்பாடுகளும் உளவெனப் பொருள்கூறி, அவ்வாறும் முறையே “புகுமுகம் புரிதல். . . . தகுமுறை நான்கே ஒன்றென மொழிப” எனத் தொடங்கிப் ‘புலம்பிய நான்கே ஆறென மொழிப’ என எண்ணி முடிக்கும் மெய்ப்பாட்டுத் தொகை ஆறுமாமென அமைத்துக் கோடலும் தவறாகாது. | சூத்திரம் : 3 | | | | நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென் றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப. |
|