தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 321 |
ஒழிவு தருவன அழுகை விளையாதாகலின் “விளிவில் கொள்கை அழுகை நான்கென” அவற்றின் பொதுவியல்பு விளக்கப்பட்டது. ஏகாரங்கள் எண் குறிப்பன; ஈற்றது அசை; தேற்றமெனினும் தவறாகாது. ‘என’ என்பது பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச்சொல். சூத்திரம் : 6 | | | மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு யாப்புற வந்த இளிவரல் நான்கே. |
கருத்து : இஃது, இளிவரல் எனும் மெய்ப்பாட்டு வகை நான்கும் அவற்றின் பொதுவியல்பும் குறிக்கின்றது. பொருள் : மூப்பு = முதுமை; பிணி = நோய்; வருத்தம் = இடுக்கண், அதாவது அல்லல்; மென்மையொடு = எளிமை, அஃதாவது நொய்ம்மையுடன்; யாப்புறவந்த இளிவரல் நான்கே = தொடர்ந்து படரும் மானக்குறை நான்குவகைத்தாம். குறிப்பு : மென்மை, இங்கு மிருதுத்துவம் குறியாது இகழ்ச்சிக்காளாக்கும் எளிமை அதாவது நொய்ம்மைப் பொருட்டாம். இளிவரல், மானம் குன்ற வருவது. “இளிவரின் வாழாத மானமுடையார்” எனவும், “இடுக்கண் வரினும் இளிவந்த செய்யார்” எனவும் வருதலான், இளிவரல் இப்பொருட்டாதல் தெளிக. முன் அழுகை வகையுள் ஒன்றாகச் சுட்டப்பட்ட இளிவு அவலிக்கும் அவமதிப்பைக் குறிக்கும். அது பழிபடு குற்றமின்றியும் பிறரிகழ்வாற் பிறக்கும் பெற்றியது; எனவே, இளிவு தன்னெஞ்சு சுடுதலின்மையால் வாழ்வில் வெறுப்பு விளையாது. முன் சூத்திரத்திலிதை இளிவென்னாது இழிவென்றே இளம்பூரணர் கொண்ட பாடத்தானும் இவ்வுண்மை வலியுறும். இச்சூத்திரம் கட்டும் இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்றவரும் பழிநிலையைக் குறிக்கும். “தண்ணந் துறைவற் றொடுத்து நந்நலம் கொள்வாம் என்றி தோழி! கொள்வாம் இடுக்க ணஞ்சி யிரந்தோர் வேண்டிய ‘கொடுத்தவை தா’ என் சொல்லினும் இன்னா தோ? நம் இன்னுயி ரிழப்பே” (குறுந். 349) |