தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 323 |
சூத்திரம் : 7 | | | புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே. |
கருத்து : இது மருட்கை எனு மெய்ப்பாட்டுவகை நான்கும் அவற்றின் இயல்பும் உணர்த்துகிறது. பொருள் : புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு = இந்நான்கனொடும் கூடி; மதிமை சாலா மருட்கை நான்கே = அறிவு சிறவா மயக்கவகை நான்காம். குறிப்பு : புதுமை, முன்னறியா யாணர்த்தன்மை; அதாவது நூதனம். பறழுக்கு வயிற்றில் புறப்பையுடைய கங்காரு, பறக்குமீன், சிற்றுயிருற்றக்கால் பற்றிப் பிசைந்துண்ணும் பூச்செடி, கையிலடங்குஞ் சிறுநாய், கண்கொள்ளாப் பெருமலை, இருதலை, முக்கண், ஐங்கால், அறுவிரல் முதலிய வழக்கிறந்த உறுப்பு உடைய உயிர்கள்போல்வன காண எழுமுணர்வு, புதுமையிற் பிறக்கும் வியப்பாகும்; அது பெரிதும் இயற்கையிற் றோன்று மியல்பிற்றாம். ஆக்கம், அறிவுடை மக்கள் சமைப்பாலாவது; எனவே ஆக்கமருட்கை செயற்கையிற்றோன்றும் அரும்பொருள் விளைக்கும் வியப்பாகும். வானவூர்தி, பேசும்படம் போல்வன ஆக்க மருட்கையாம். ஒன்றன் இயல்பு அமைப்பு விளைவுகளைக் கண்டாங்கே ஆய்ந்தறியக் கூடுமிடத்து மயக்கில்லை. மதியால் மதிக்கப்படாவழி மட்டுமே வியப்பு விளையும். ஆதலின், தேர்ந்து தெளியும் திறனற் றறிவுசிறவா நிலையில் வருவதே மயக்கமாமென்பது தோன்ற “மதிமை சாலா மருட்கை நான்கே” என அவற்றின் இயல்பும் வகைமையும் விளக்கப்பட்டன. ஆக்கமொடு என்பதின் “ஒடு” பிரிந்து மற்றைய ஒவ்வொன்றோடும் சென்று சேரும் எண்ணிடைச்சொல். ஈற்றேகாரம் அசை, தேற்றமுமாம். சூத்திரம் : 8 | | | அணங்கே விலங்கே கள்வர்தம் மிறைஎனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே. |
|