பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை325

புகழ்தற்குரிய பெருமை யுணர்வூட்டலின், இவை நான்கும் பெருமித வகையாயின.

‘என’ எண்ணிடைச்சொல், ஈற்றேகாரம் அசை; தேற்றமுமாம்.

சூத்திரம் : 10 
 உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.

கருத்து : இதில் வெகுளிவகை நான்கும் அவற்றின் பொது இயல்பும் கூறப்பெறுகின்றன.

பொருள் : உறுப்பறை = சினை சிதைத்தல்; அதாவது அங்கபங்கம்; குடிகோள் = ஓம்பற்குரியாரை நலிதல்; அலை = அடித்தும் இடித்தும் அலமரச் செய்தல்; கொலை = கொல்லல்; என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே = இவை நான்கும் வெறுப்பால் விளையும் வெகுளி வகைகளாகும்.

குறிப்பு : உறுப்பின் ஊறும், சுற்ற நலிவும், அலைப்பும், கொலையும், வெறுப்பால் விளையும் சினமுதலாதலின் இவை “வெறுப்பின் வந்த வெகுளி நான்கே” என அவற்றினின் இயல்பு வகைமைகள் குறிக்கப்பட்டன. தீதில் சினம் அறமாதலின் அதனை விலக்கி வெறுத்தற்குரிய வெகுளி வகையே இங்குக் கூறப்பட்டன. ஈண்டு, “என நனிவெறுப்பின் வந்த” என்றிளம்பூரணர் கொண்ட பழைய பாடம், வெறுப்பு மிகுதியால் விளையும் வெகுளியின் பெற்றியை இனிது விளக்குதலறிக. இதில் “என்ற”, என்பது இளம்பூரணர் பாடத்து “என” போல எண் குறிப்பதை ‘என்றும் எனவும் ஒடுவும் என’ முன்குறித்த இடையியற் சூத்திரத்தாலறிக. ஈற்றேகாரம், தேற்றம், அசையுமாம்.

சூத்திரம் : 11 
 செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்
றல்லல் நீத்த உவகை நான்கே.

கருத்து : இஃது, உவகை வகையும் இயல்பும் உணர்த்துகிறது.