பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை329

முதற்படி. காதற்றலைவனைத் தலைவிக்குக் கிழவன் எனவும், தலைவியைத் தலைவனுக்குக் கிழத்தி யெனவும், சொல்லும் மரபு இப்பொருட்டாதலறிக, ‘பிறன்பொருளாள்’ என மனைவியை உடைமைப் பொருளாகக் கூறியதும், உரிமை என்றே பெட்புடை மனைவிமார் அழைக்கப்பெறுவதும், “யானுன் உடைமை” எனக்காதலர் தம்முள் வழங்குவதும், இச்செவ்வி கருதியேயாம். எனவே அன்பின் வழித்தாம் உரிமையுணர்வே உடைமையாகும். இன்புறல், அக்கிழமையுணர்வால் விளையுமகிழ்வாகும். நடுவுநிலை, காதலுங் கடனும் மோதக் கோடா மனச்செப்பம்; விழைவுக்கடிமையாகாது அறமறவாக் காதற்செவ்வி. நடுவுநிலை ஈண்டுச் சமநிலை எனும் சுவை சுட்டாது, தனை மறக்கும் கற்புக் காதலின் உணர்வையே குறிக்கும். அருள், தவறுணரா அன்பின் பெருக்கம்; “காணுங்கால்காணேன் தவறாய” என்பதறிக. தன்மை, தானதுவாகுமியல்பு; ‘நோக்குவ எல்லாமவையே போறல்’ எனும் மனமாட்சி. அடக்கம் = தன் தலைமைநிலை மறந்து காதலால் மனமொழி மெய்யாற் பணிதல். “ஞாட்பினு ணன்ணாரும் உட்குமென் பீடு ஒண்ணுதற் கோஒ உடைந்தது” எனவும் “நாணொடு நல்லாண்மை (காதலுக்கு முன்)பண்டுடையேன்”எனவும் வருவனவற்றால் அன்பு அடக்கம் தருதலறிக. இனி, அடக்கம் மறை பிறரறியாமற் காக்கும் நிறையைக் குறிக்குமெனினும் அமையும்.

வரைதல், நாணுவரை யிறந்து முன் உவந்த பலவும் வெறுத்து விலக்கும் மனநிலை; இது காதலினெழுவது. அன்பென்பது அருட்கு முதலாகி மனத்தின்கண் முற்பட நிகழ்வது. இவை எட்டும் காதலின் முதனிலையா மியற்கைப் புணர்வொடு தொடர்வன.

கைம்மிகல் = அடங்காக் காதற்பெருக்கு. “நோய் மலிநெஞ்சமொடு இனையல், தோழி”என்பதும், “ஆற்றா (காதல்) நோயட “இவளணிவாட” என்பதும் போல வருவன காண்க. “காதல்கைம்மிகல்” எனக் களவியலிலும் (சூ. 115) முன் இவ்வியலிலும் (சூ. 23) சுட்டுவதானுமுணர்க. நலிதல் = மெலிவு, அஃதாவது வலிஅழிவு. சூழ்ச்சி = நேராக்கூட்டம் நிகழவழியாராய்தல். வாழ்த்தல் = காதலால் நெஞ்சையும் பிறவற்றையும் வாழ்த்துதல். “வாழி என்னெஞ்சே”, “நீவாழி பொழுது”, “வாழி அனிச்சமே” “காதலை வாழிமதி”, “புன்கண்ணை வாழி மருண்மாலை” என வருவன காண்க. நாணுதல் = வெள்குதல்; “காமமும் நாணும்