பக்கம் எண் :

330நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

உயிர்காவாத்தூங்கும் என்நோனா உடம்பினகத்து” எனவும், “பல்லோர்கூற யாம்நாணுதுஞ் சிறிதே” எனவும், “யானோக்குங் காலை நிலனோக்கும்” எனவும், “கொண்க னூர்ந்த கொடிஞ்சி நெடுந்தேர் . . . . காணவந்து நாணப்பெயரும்” எனவும் வருவன காண்க. துஞ்சல் = காதற்கனவுற வுறங்கல்; “கயலுண்கண் யானிரப்பத் துஞ்சில்” எனவும், “துஞ்சுங்காற் றோண்மேலராகி” எனவும், “கனவினாற் காதலற் காணாதவர்” எனவும் வருபவை கண்டறிக. அரற்றல் = வாய்விடல். “நெஞ்சநடுக்குற” வெனும் பாலைக்கலியில் “பாயல் கொண்டென்றோட் கனவுவார், ‘ஆய்கோற் றொடிநிரை முன்கையாள்; கையாறு கொள்ளாள், கடிமனை காத்தோம்ப வல்லுநள் கொல்லோ?’ என்றா ராயிழாய்” எனவருதலின், தலைவன் அரற்றினமை காண்க. கனா = தூக்கத்திற் றோற்றுவது. இதுவும் காதலிற் கனிவது. “நுண்பூண் மடந்தையைத் தந்தாய் போல இன்றுயில் எடுப்புதி கனவே”(குறுந். 147) எனத் தலைவன் கனவலும், “நனவினா னல்காக் கொடியார் கனவினான், என் எம்மைப் பீழிப்பது?” எனத் தலைவி கனவலும் அறிக. இவ்வெட்டும், இடந் தலைப்பாடெனு மிரண்டாம் காதனிலைக்குச் சிறந்துரியவாம்.

இனி, முனிதல் முதல் உயிர்ப்புவரையுள்ள எட்டும் ‘பாங்கொடு தழாஅல்’ எனும் மூன்றாங் காதல் நிலைக்குரிய. அவை வருமாறு: முனிதல் = முன்விரும்பிய வெறுத்தல். “பாலுமுண்ணாள் பந்துடன் மேவாள்” எனுங் கயமனார் குறும்பாட்டாலறிக. நினைதல் = விருப்புற்று நினைத்தல், “நினைப்பவர் போன்று நினையார்கொல்” எனவும் “உள்ளாதிருப்பி னெம்அளவைத்தன்றே” எனவும், தலைவியும், “நினைந்தனல்லனோ பெரிதே” எனத் தலைவனும் நினைத்தல் காண்க. (குறுந். 102, 99)“. . . . பெரிதழிந்தெனவ!கேளாய், நினையினை நீ நனி” எனவரும் நற்றிணைச் (253) செய்யுளுமிதுவேயாம்.

வெரூஉதல் = பிரிவும் ஊறும் அஞ்சுதல். “அரிதரோதேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோரிடத்துண்மையால்” என்பதிலும், “நாம் நகப்புலம்பினும், பிரிவாங்கஞ்சித் தணப்பருங்காமம் தண்டியோரே” என்னும் குறும்பாட்டிலும் (117) “நீயே, அஞ்சல் என்ற என் சொல்லஞ்சலையே” என்னும் சிறைக்குடி ஆந்தையார் (குறுந். 300) செய்யுளினும், பிரிவச்சம் கூறுப. “இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல். ”(குறுந். 217) எனவும், “உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள்” (நற். 253) எனவும், ஊறச்சம் கூறுதலும்