| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 331 |
உணர்க. மடிமை = ஆற்றாமையின், அயர்வு. இதனை “விளையாடாயமொ டயர்வோளினியே” எனவும், “ஆய்வளை ஞெகிழவும் அயர்வு மெய்ந்நிறுப்பவும், நோய் மலி வருத்தம் அன்னையறியின்” எனவும், வரும் (குறுந். 396, 316) பாட்டடிகளானறிக. கருதல் = குறிப்பு. “நாட்டமிரண்டும் அறிவுடம்படுத்தற்குக் கூட்டியுரைக்குங் குறிப்புரையாகும்”, “குறிப்பே குறித்தது கொள்ளுமாயின்” எனுங் களவியற் சூத்திரங்களானுமிக் கருத்துண்மை தேர்க. “செறாஅச் சிறு சொல்லும், செற்றார் போனோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு” (குறள் 1097); “வைகல் தோறும் நிறம் பெயர்ந் துறையுமவன் பைதல் நோக்கம் நினையாய் தோழி. . . . பிறிதொன்று குறித்ததவன் நெடும்புறநிலையே” (குறுந். செய் ; 298) என்பவற்றாலறிக. ஆராய்ச்சி = காதலரன்பு கனிய வழிசூழ்தல். “மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ அழியல், வாழிதோழி. . . . வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே” (குறுந். 73) எனவும், “அவரொடு சேய்நாட்டு. . . . பொருங்களிற்றடிவழி நிலைஇய நீரே உணலாய்ந் திசினால்” எனவும் காதல் பற்றி ஆராய்ச்சி நிகழ்தலறிக. விரைவு = வேகம், ஆர்வ மிகுதியாலெழுவது. “மாலைவாராவளவைக் காலியற் கடுமாக் கடவுமதி, பாக!. . . . உண்கட் தெரிதீங்கிளவி (யோள்) தெருமரல் உயவே. . ” (குறுந். 250); “காலியற்செலவின் மாலை எய்திச் சின்னிரை வால்வளைக் குறுமகள், பன்மாணாக மணந்துவக் குவமே” (குறுந். 189); என்பவற்றாற் காதலின் வேகம் கண்டு தெளிக. உயிர்ப்பு = ஆனாக் காதலின் நெட்டுயிர்த்தல். “பானாட் பள்ளியானையின் உயிர்த்தென்னுள்ளம் பின்னும் தன்னுழையதுவே” (குறுந். 142) எனத் தலைவனும், “பள்ளியானையின் உயிர்த்தனன்நகையிற் புதல்வற்றழீஇயினன்” (குறுந். 359): “பள்ளியானையின் வெய்ய உயிரினை” (நற். 253); எனத் தோழியும், கூடாவழிக்காதலன் நெட்டுயிர்த்தல் குறிக்கப் பெறுதலறிக. இனி, “தோழியிற் புணர்வு” என்னும் காதலின் நான்காநிலைக்குரிய எட்டும் வருமாறு; கையாறு = வசமழிவு, அதாவது செயலறிவு; இதுவும் காழ்த்த காதனோயால் வருவது. இதனை, “பிரிந்தோர் கையற நரலும் நள்ளென் யாமம்” எனவும் (குறுந். 160); “பிரிந்தோர் கையற வந்த பையுள் மாலை” எனவும் (குறுந். 391) “காலைவருந்துங் கையாறு” எனவும் (குறுந். 48) வருவனவற்றாலறிக. இடுக்கண் = காதலால் வருந்தும் துன்பம். |