பக்கம் எண் :

332நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

“யாமெங் காதலர்க் காணே மாயிற்
 செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
 கல்பொரு சிறுநுரை போல
 மெல்ல மெல்ல இல்லா குதுமே”

(குறுந். 290)

எனவும்,

“நாமில மாகுத லறிது மன்னோ
 வில்லெறி பஞ்சி போல. . . . .
 . . . . . . சேர்ப்பனொடு நகாஅ வூங்கே”

(நற். 299)

எனவும்,

“. . . . . . . . இனைபெரி துழக்கும்
 நன்னுதல் பசலை நீங்க, அன்ன
 நசையாகு பண்பி னொருசொல்
 இசையாது கொல்லோ காதலர் தமக்கே” (குறுந். 48)

எனவும்,

“படலாற்றா பைத லுழக்கும் கடலாற்றாக்
 காமநோய் செய்தஎன் கண்” (குறள். 1175)

எனவும்,

“பதிமருண்டு பைதலுழக்கு மதிமருண்டு
 மாலை படர்தரும் போழ்து”

(குறள். 1229)

எனவும் வருவனவற்றால் காதல்நோயுழப்பவ ரிடுக்கண் கண்டுணர்க. பொச்சாப்பு = மறதி. இது காதலர் அன்புத் திணைக்குரித்தாதல் “வேட்கை ஒருதலை” எனுங் களவியற் சூத்திரத்து மறத்தலையும் களவுக் கைகோளின் சிறப்புடை மரபினவையுளொன்றாக் கூறுதலானும் விளங்கும். பொறாமை = காதலர் ஒருவர் பழி ஒருவர் ஆனாமை, ஒல்லாமை. இயற்பழிக்கும் தோழி கூற்றும், ஏனோர் தூற்றும் பழியும் தாங்காது தலைவி வெறுத்தல் காதலியல்பாம். இயற்பழித்த தோழியை மறுத்து,

“இதுமற் றெவனோ தோழி! துனியிடை
 இன்னம் என்னும் இன்னாக் கிளவி
 . . . . . . . . . . .