பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை33

கருத்து : இதுவும் இதையடுத்த ‘உரிப்பொருளல்லன’ என்னுஞ் சூத்திரமும் முன் ஐந்தாவது சூத்திரத்திற் கூறிய முல்லை முதலிய நிலவகைகளுக்கும், பின் ‘புணர்தல் பிரிதல்’ எனும் 14ஆவது சூத்திரத்திற் கூறும் குறிஞ்சி முதலிய திணைவகைகளுக்கும் உள்ள இயைபு முரண்களை, நடுநிலை விளக்காய் நின்று, எடுத்துக்காட்டி ஐயமகற்ற எழுந்த சூத்திரங்களாகும்.

பொருள் : திணை மயக்குறுதலுங் கடிநிலையிலவே = குறிஞ்சி முதலிய அன்பினைந் திணைகளான புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற ஐந்தொழுக்கங்களும் தத்தமக்குச் சிறப்புரிமையுடைய முறையே குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் என்னும் நிலங்களில் நிகழ்வதுடன், அவ்வாறு சிறப்புரிமையற்ற பிற நிலங்களில் வந்து கலத்தலும் விலக்கப்படா; நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப = (இவ்வாறொழுக்கங்கள் தமக்குரிமையற்ற நிலங்களில் நிகழ்ந்து மயங்குதலமையு மெனினும்) அவ்வொழுக்க மயக்கம் பற்றித் தம்முள் நிலங்கள் மயங்குதலில்லை யென்று கூறுவர்; புலன் நன்குணர்ந்த புலமையோரே = புலனெறி வழக்கங்களை நன்கறிந்த அறிவுடையோர்.

குறிப்பு : இதன் முதல் மூன்றாமடிகளின் ஈற்றேகாரங்கள் அசைநிலை. உம்மை திணைக்கும் மயக்கம் சிறப்பின்மை உணர்த்தும். இதனால் ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொருதிணை சிறப்புரிமை யுடையதென்பதும், அவ்வுரிமை முறையன்றி நிலங்களுந் திணைகளும் தம்முள் மயங்குதல் சிறவாதெனினும் விலக்குமாறில்லை என்பதும் தெளியப்படும். மயக்கம், தனக்குச் சிறப்புரிமையற்ற நிலத்தில் பிற ஒழுக்க நிகழ்ச்சி குறிக்கும்; எந்நிலத்தும் திணைகள் தம்முட்டா மயங்குதல் கூடாமையின், அது கருத்தன்மை தேற்றம். ஒருங்கு, உடனிகழ்ச்சிப் பொருட்டு.

அகத்துறைகளில் முதலில் ஒழுக்கங்களுக்கே உரிய குறிஞ்சி முதலிய பெயர்கள் பின் நிரலே அவ்வொழுக்கங்களுக்குச் சிறந்துரிய நிலங்களுக்கும் ஆகுபெயராய் வழங்கலாயின. அவைகள் நிலங்களுக்கே உரிய பெயர்களெனல் பிற்காலப் பிறழ்வுணர்ச்சி. எனவே, சிறப்புக் குறியாகப் புணர்தல் முதலிய ஐந்திணைகளையும், ஆகுபெயராய் அவற்றிற்குச் சிறந்துரிய நிலங்களையும், குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் எனும் பொதுப்பெயர்களாற் கூறுதல் பழைய தமிழ் நூன் மரபு. எனில், பெயரொற்றுமையால்