| 34 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
திணைகளும் நிலங்களும் யாண்டும் ஒருநீர்மைய வெனக்கொண்டு, திணைமயங்குந்தோறும் நிலமயக்கமும் உண்டெனக் கொள்ளுதல் கூடாதென வற்புறுத்தி ஐயமகற்றுவதே ஈண்டிச்சூத்திரக்கருத்தாகும். திணையென்பது ஒழுக்கத்திற்கே சிறந்துரிய பெயராகும். ‘திணைக்குரிப்பொருளே’ என்னுஞ் சொற்றொடரும் இதனை வலியுறுத்தும். ஒவ்வொரொழுக்கமும் அவ்வதற்குச் சிறப்புரிமை கூறிய ஒரு நிலத்திற்கே தனியுரிமை யுடைத்தன்று. ஒவ்வொரு நிலமக்களும் அவ்வந் நிலத்தில் ஐந்திணையொழுக்கங்களையும் கையாளுதலியல்பு. ஆகவே, ஒவ்வொரு நிலத்தும் அதுவதற்குச் சிறந்துரிய ஒழுக்கமேயன்றிப் பிறவொழுக்கங்களையும் தொடர்பு படுத்திப் புலனெறி வழக்கஞ்செய்தல் தவறாகாது. ஒரு நிலத்து நிகழும் ஒழுக்க வேறுபாட்டால் அந்நிலத்தியல்பும் மாறினதாகக் கருதலாகாது. மயங்கி நிகழும் ஒழுக்கத்தோடு ஒருங்கே நிலமயக்கங் கொள்ளுதல் மரபன்று என்பதும், ஒவ்வொரு நிலத்திற்குச் சிறப்புரிமையுடையதாகக் கூறப்படினும் அதுகொண்டு அந்நிலத்து அவ்வோர் ஒழுக்கமே நிகழ வேண்டும் என்ற வரையறையின்றி நிலத்தியல் கருதாமல் திணைமயக்கம் (அதாவது பிறவொழுக்க நிகழ்ச்சி) கூறுதலும் மரபென்பதும், தொல்காப்பியர் இச்சூத்திரத்தால் விளக்கிப் போந்தார். எனவே, எங்கு எவ்வொழுக்கம் நிகழினும் அதனால் நிலத்தியல் மாறாது; காடு புணர்ச்சி நிகழ்வதால் குறிஞ்சியாகாது, முல்லை நிலமேயாம். பிரிவாற்றாக் குறமகளிரி ரங்குவதால் மலைநிலம் நெய்தலாகாது; குறிஞ்சியேயாம். தத்தம் இயல்மாறாத நிலம் யாதாயினும், அதில் நிகழும் ஒழுக்கம்பற்றித் திணை வகுப்பது பழைய மரபு; ஒழுக்க இயல் கருதாது, நிலவகையால் திணையமைப்பது பிழைபட்ட பிற்கால வழக்கு. அது தொல்காப்பியர்க்குடன்பாடன்று என்பது இச்சூத்திரத்தால் தெற்றென விளங்கும். புணர்தல் முதலிய ஒவ்வொரு திணை அல்லது ஒழுக்கத்திற்கும், முறையே மலை முதலிய நிலங்களைப் போலவே, கூதிர்யாம முதலிய காலவகைகளும் தத்தம் இயற்பொருத்தம்பற்றித் தனிச்சிறப்புரிமை கொள்ளுமெனினும், ஒரு திணைக்கு ஒரே காலந்தான் கூறல் வேண்டுமெனும் வரையறையில்லை. எந்தத் திணையும் தன் இயல்பற்றி அதற்குச் சிறந்துரியதல்லாத பிறநிலம் பிற காலங்களில் நிகழ்தல் கூடுமாதலின், ஒவ்வொரு திணையும் எல்லா நிலங்களிலும் போலவே எல்லாக் காலங்களொடும் கலந்து |