| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 35 |
நிகழ்வதும் கடியப்படாது என்பதும் வெளிப்படை. எனவே, ஒவ்வோ ரொழுக்கமும் அதற்குச் சிறந்துரியதாகக் கூறப்பெற்ற நிலம்பொழுதுகளிலேயே நிகழும் என ஒருதலையாக் கொள்ளல் கூடாது; உரிப் பொருள்களாகிய எல்லா ஒழுக்கங்களும், நிலமும் பொழுதுமாகிய முதற்பொருள் வகைகளில் ஒரோவொன்றைத் தத்தமக்கு இயலியைபுபற்றிச் சிறப்புரிமை கொள்ளினும், எல்லா நிலங்களினும் எல்லாப் பொழுதுகளினும் எத்திணையும் ஏற்றபெற்றி கலந்து நிகழ்தலுங் கடியப் படாது என்பதே இச்சூத்திரக் கருத்தாதல் தெளிவாகும். இனி, இச்சூத்திரத்தில் முதற்பொருளிரண்டில் பொழுதுகூறாமல் நிலம் விதந்து கூறப்பட்டது. பொழுது போலன்றித் திணையொடு நிலம் குறிஞ்சி முதலிய பொதுப்பெயர் பெற்று மயங்குதலால் வரும் ஐயமகற்றற் பொருட்டு, திணையொடு பெயரொற்றுமையில்லாத பொழுதுகள் பற்றி அத்தகைய மயக்கத்திற்கிடனில்லை யாதலின், பொழுது மயங்காமை விதந்து கூறவேண்டிற்றில்லை. இதற்கு “ஒரு நிலத்து இரண்டுரிப்பொருள், அதாவது இரண்டொழுக்கம் தம்முண் மயங்குதலன்றி, இரண்டு நிலம் ஒரோவொழுக்கத்தின்கண் மயங்குதலில்லை” என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மேலும், “உரிப்பொருள் மயக்குறுதல் என்னாது, திணை மயக்குறுதலுமென்றார். ஓருரிப்பொருளொடு ஓருரிப்பொருள் மயங்குதலும். . . . . . . இவ்வாறே காலமயங்குதலும், கருப்பொருள் மயங்குதலும் பெறுமென்றற்கு” எனச் சிறப்புக்குறிப்பும் கூட்டிவிரித்தார். இதனால் ஒரு நிலத்தொருகாலத்து ஒன்றன்மிக்க பலதிணைகள் மயங்குமென்பது கருத்தாயின், அது கூடாமை தேற்றம். அன்றி ஒருதிணை பல நிலத்தும் மயங்கும் இயல்பையே இவ்வாறு கூறினர் எனின், அது மிகையாவதோடு வேறுபாடில்லாத ஒரு மாறுபாட்டைத் தானேபடைத்து மயங்குவதுமாகும். ஒவ்வொரு நிலத்தும் அதற்குரிய வல்லாப் பிறவொழுக்கங்கள் நிகழ்தலமையும். என்பதனாலேயே, ஒவ்வோரொழுக்கத்திற்கும் அதற்குரிய நிலமேயன்றிப் பிறநிலங்களையுந் தொடர்புபடுத்திக் கூறுதல் அமைவுடைத்தென்பதும் தெளியப்படும். ஒரு நிலத்துப் பல வொழுக்கம் நிகழும் என்றபின், பலநிலத்து ஓரொழுக்கம் நிகழும் (அதாவது ஒவ்வோ ரொழுக்கத்தோடும் பல நிலத்தொடர்பு அமையும்) என்பதை விலக்குமாறில்லை. எனவே, நச்சினார்க்கினியர் கூறுவதே ஈண்டுக் கருத்தாயின், ‘திணைமயக்குறுதலுங் கடிநிலையிலவே’ என்ற அளவே |