| 36 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
அக்கருத்தை விளக்கப் போதியதாகும்; ‘நிலனொருங்கு மயங்குதலின்று’ எனக் கூட்டியுரைப்பது பொருட் பொருத்தமின்றி முரண்பாடும் விளைத்து மயங்க வைக்கும். இனி, ஒருப்பட்ட தலைமக்களுள் ஓரொழுக்கம் பல நிலங்களில் நிகழ்வது ஒரு காலத்தமையாது என்று கூறி, நச்சினார்க்கினியர் உரைக்கு அமைவு காட்டுவதும் பொருந்தாது. ஒரேகாலத்தும் ஒருநிலத்தும் பலவொழுக்கம் ஒருங்கு நிகழ்தலும், ஒருப்பட்ட ஒரே தலைமக்களுள் ஓரொழுக்கம் ஒருகாலத்துப் பலவிடத்து நிகழ்தலும் கூடாமை வெளிப்படை. அதனாலும் அது பொருளன்மையறிக. இதற்கு இளம்பூரணர் கூறும் பொருளாவது: “ஒருதிணைக்குரிய முதற்பொருள் மற்றோர் திணைக்குரிய முதற்பொருளொடு சேரநிற்றலுங் கடியப்படாது; ஆண்டு நிலம் சேரநிற்றலில்லை யென்று சொல்லுவர்; எனவே காலம் மயங்கும் என்றவாறாயிற்று” என்பதே. சூத்திரத்தில் ஒரு நிலத்திற்குரிய வொழுக்கம் வேறொரு நிலத்திற்குக் கூறுதலும் கடிநிலையிலவெனத் தெள்ளத்தெளிய விளக்கி யிருக்கவும், அதற்கு மாறாக ‘ஒருதிணைக்குரிய முதற்பொருள் மற்றோர் திணைக்குரிய முதற்பொருளோடு சேர நிற்றல்கூடாது’ என முரணப் பொருள் கூறுவது அமைவுடைத்தன்று. தொல்காப்பியர் ‘திணைமயக்குறுதல்’ என்றாரன்றி, ‘திணையில் முதற்பொருள் மயங்குதல்’ என்று கூறினாரில்லை. ஆதலின், இளம்பூரணர் கூற்றும் இச்சூத்திரச்சொற்றொடருக்கு நேரிய பொருளன்று. திணைகளையும் நிலங்களையும் சுட்டி அவற்றினியைபு விளக்க எழுந்த இச்சூத்திரத்தில், அவற்றின் புறம்பான காலங்களையும் கருப்பொருள்களையும் புகுத்த வேண்டிப் பழைய, உரைகாரர் இச்சூத்திரத்திற்குத் தம்முள் மாறுபடப் பலவாறு மயக்கத்திற்கிடமான பொருந்தாப் பொருள் கூறுவாராயினர். திணை மயக்குறுதற்குச் செய்யுள். “கடற்கானற் சேர்ப்ப! கழியுலாஅய் நீண்ட அடற்கானற் புன்னைதாழ்ந் தாற்ற- மடற்கானல் அன்றி லகவும் அணிநெடும் பெண்ணைத்தெம் முன்றி லிளமணன்மேல் மொய்த்து” (திணைமாலை190. செய். 56) |