பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை37

இதில் குறிஞ்சித் திணையின் இரவுக்குறி நேரும்துறை, தனக்குரிய குறிஞ்சி நிலத்தன்றி, இரங்கற்றிணைக்குரிய நெய்தனிலத்து மயங்கியதறிக. அவ்வாறு குறிஞ்சித்திணை வந்து கலப்பினும், அதனால் நிலத்தியல் மயங்காமல் நெய்தலாகவே நிற்பது கூறப்படுதலும் காண்க. இன்னும், “புலாலகற்றும்” எனும் திணைமாலை (35ஆம்) வெண்பாவும் நெய்தனிலத்தில் குறிஞ்சித்திணை மயக்கம்கூறும். இனி,

“புன்புறவே சேவலோ டூடல் பொருளன்றால்,
 அன்புற வேயுடையா ராயினும் வன்புற்
 றதுகாண் அகன்ற வழிநோக்கிப் பொன்போர்த்
 திதுகாணென் வண்ண மினி”

(திணைமாலை 152ல். செய். 74)

எனும் திணைமாலைப்பாட்டில் நெய்தற்றிணை பாலைநிலத்து மயங்குதல் அறிக.

சூத்திரம் : 13 
 உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே.

கருத்து : இது ஐந்திணைகள் போலவே, அத்திணைகளின் சார்பான பிற உரிப்பொருள்களும் பல நிலங்களிலும் ஏற்றபெற்றிவந்து மயங்கும், என்று கூறுவது.

பொருள் : உரிப்பொருளல்லன = “திணைக்குரிப்பொருளே” என வரையறுத்த புணர்தல் முதல் ஐந்திணையல்லாத உரிப்பொருளான தலைமக்கள் ஒழுக்கமாவன பிற; மயங்கவும்பெறும் = எந்நிலத்தும் வந்து கலத்தலுமுண்டு.

குறிப்பு : புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னும் திணைக்குரிப்பொருள் ஐந்துமன்றி அவற்றின் சார்பாய் அவ்வுரிப் பொருள்களோடு அமைத்துக் கோடற்பாலனவாய், பிற்றைச் சூத்திரங்கள் கூறும் ‘கொண்டுதலைக் கழிதல்’ ‘பிரிந்தவணிரங்கல்’, ‘கலந்த பொழுது’, ‘காட்சி’ முதலியனவும், ஐந்திணை உரிப்பொருள்களைப் போலவே ஒரு நிலத்துக்குத் தனியுரிமையின்றி எல்லாநிலத்தும் வந்து மயங்கவும் பெறும். ஈற்றேகாரம் அசைநிலை.