| 334 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
மிகை = கைம்மிகு காதலான் வரும் நிறையழிவு. இஃது இப்பொருட்டாதல் “பொழுதலை வைத்த கையறுகாலை இறந்த போலக் கிளக்குங் கிளவி. . . மடனே, வருத்தம், மருட்கை, மிகுதியொடவை நாற்பொருட்கண் நிகழுமென்ப” எனப் பொருளியலில் வருதலானறிக. “மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றிவிடும்” எனவும், “காமக் கணிச்சியுடைக்கு நிறை என்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு” எனவும் தலைவற்கும், “பன்மயக் கள்வன் பணிமொழி யன்றோ நம்பெண்மை யுடைக்கும் படை” எனத் தலைவிக்கும், காதல்மிகையும் அதனால் நிறையழிவும் சுட்டப்படுதலறிக. நடுக்கு = காதலர்க்கு உணர்வு மிகையானாம் பனிப்பு. “ஆம்பல் குறுநர் நீர்வேட்டாங்கு இவள் இடைமுலைக் கிடந்தும் நடுங்கலானீர்” (குறுந். 178) எனத் தலைவனுக்கும், “சூர்நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே. . . . மடந்தை! பரிந்தனென் அல்லனோ இறை இறையானே?” (குறுந். 53) எனத் தலைவிக்கும், முறையே காதல் வேகத்தானாய நடுக்கம் குறிக்கப்பட்டமை காண்க. இவ்வாறு அகத்துறைகளுக்குச் சிறந்துரிய இவற்றையும் முன் “எட்டே மெய்ப்பாடு” என வகுத்துப் பிரித்த எண்ணான் குணர்வு போலவே, அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பவருவன எனக் கருதுவர் பழைய வுரைகாரர். நானான்காய் எட்டுவகை பெற்றுப்புறந்தோன்றலால் மெய்பாடாமெனச் சுட்டி அவற்றை ஒருபால் எனப்பிரித்து நிறுத்தி, பின் மற்றொரு பாலெனக் குறிக்கப்பெற்ற இவை முப்பத்திரண்டையும் தனித்தும் நானான்காயும் எண்ணாமல், எவ்வெட்டாய் நான்கு வைகையிற் றொகுத்ததன் குறிப்பும் பயனும் அவருரையில் விளக்கப்பெறாமையானும், இவை முன் முப்பத்திரண்டின் வேறுபட்ட பான்மைய எனச் சூத்திரச் சொற்றொடர் சுட்டுதலானும், அவருரை பொருந்தாமையுணர்க. அன்றியும், இவையும் முன்னவை போலப் பொருட் பகுதிகளிரண்டற்கும் பொதுவாய் வருமெனில், பொது உணர்வு பலவிருக்க இவற்றை இவ்வாறு ஈண்டுத் தொகுத்துக் கூறுதலிற் சிறப்பின்மையோடு, இவற்றுட் சில முன் மெய்ப்பாட்டு வகையில் வந்தனவால் ஈண்டு மீண்டுங் கூறுதல் மிகையுமாகும். இதில் வெரூஉதலும் நடுக்கமும் முன் அச்சமாகும்; அரற்றல் முன் அழுகையினடங்கும்; இன்புறல் முன் உவகையாகும்; மடிமை முன் அசைவிலடங்கும்; இடுக்கண் முன் வருத்தமாகும்; இதனாலும் இவர் கருத்து இச்சூத்திரப் பொருளன்மை தேறப்படும். |